செவ்வாய் கிரகத்தில் பெரிய ஏரி கண்டுபிடிப்பு
வேலுசாமி (Author) Published Date : Jul 26, 2018 10:39 ISTWorld News
செவ்வாய் கிரகத்தில் பல ஆண்டுகளாக க்யூரியாசிட்டி விண்கலம் மூலம் ஆய்வு நடந்து வருகிறது. பூமிக்கு அடுத்த கோளான செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழக்கூடிய சூழல் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறி வந்த நிலையில் அதனை உறுதி படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. முழுக்க பாறைகளால் சூழப்பட்ட செவ்வாய் கிரகத்தில் தற்போது தண்ணீர் இருப்பதாக இத்தாலியை சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில் "பல ஆண்டுகளாக நடந்து வந்த ஆராய்ச்சியில் தற்போது செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் முதன் முறையாக கிடைத்துள்ளது. சுமார் 20 கிமீ பரப்பளவு கொண்ட பனிபடர்ந்த இந்த ஏரியானது 3.6 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த பனிபடர்ந்த படலமானது 1.5 கிமீ ஆழத்தில் அமைந்துள்ளது. இந்த பனிப்படலத்தில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் சோடியம் போன்றவை திரவ நிலையில் உள்ளது" என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிய கண்டுபிடிப்பினை கடந்த 2003ஆம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பினால் அனுப்பப்பட்ட விண்கலம் கண்டுபிடித்துள்ளது. இதற்கு விண்கலத்தில் உள்ள ரேடார் சாதனங்கள் காரணமாக இருந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பானது மற்ற விஞ்ஞானிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழக்கூடிய சூழல் அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நீர் ஆதாரங்களில் இது தான் மிகப்பெரிய ஏரியாகும்.