6 மாநிலங்களில் ஏர்செல் சேவை ரத்து
யசோதா (Author) Published Date : Dec 22, 2017 10:39 ISTBusiness News
தொலைத்தொடர்பு துறையில் ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க அதிரடி சேவைகளை அறிவித்து வருகிறது. வாடிக்கையாளர்கள் சலுகைகளுக்கு ஏற்ப தங்களது சேவையை மாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் இலவச இன்டர்நெட் மற்றும் இலவச கால் சேவையை அறிவித்தது. இதனால் ஏராளாமான மக்கள் மற்ற நிறுவனங்களில் இருந்து ஜியோவுக்கு மாறினார். இதனால் பல நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனினும் ஏர்டெல், ஐடியா, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் தடுமாறினாலும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், மற்ற நிறுவனங்களுடன் போட்டி போட்டு சேவை வழங்க முடியாத காரணத்தினால் ஏர்செல் நிறுவனம் 6 மாநிலங்களில் தனது சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், மராட்டியம், அரியானா இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தனது சேவையை நிறுத்துவதாக உறுதி செய்துள்ளது. முன்னதாக அணில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தனது சேவையை நிறுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து ஏர்செல் நிறுவனம் வருவாய் குறைவாக இருப்பதால் தனது சேவையை நிறுத்தியுள்ளது. மேலும் தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்கவுள்ளது. ஏர்செல் பயனாளர்களிடம் இருந்து வரும் போர்ட் கோடினை மற்ற டெலிகாம் நிறுவனங்கள் அடுத்த வருடம் மார்ச் 10 வரை நிராகரிக்க கூடாது எனவும் டிராய் தெரிவித்துள்ளது.