ads

தந்தையின் குடிப்பழக்கம் ப்ளஸ்2 மாணவன் உயிரை பறித்த அவலம்

தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தாததால் தினேஷ் என்ற ப்ளஸ் 2 மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளான்.

தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தாததால் தினேஷ் என்ற ப்ளஸ் 2 மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளான்.

தற்போது தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் குடிப்பழக்கத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அடிமையாகி வாழ்க்கையை சிதைத்து வருகின்றனர். இந்த குடிப்பழக்கத்திற்கு பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அடிமையாகி வருகின்றனர். இந்த மதுவிற்பனைகளால் ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கத்திற்கு வருமானம் 20 சதவீதம் அளவிற்கு உயர்கிறது. கடந்த 2014-15 ஆம் ஆண்டுகளில் 26,188 கோடிக்கு இருந்த ஆண்டு வருமானம் 2016-17 ஆண்டுகளில் 29 ஆயிரம் கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் மது விற்பனையால் அரசாங்கம் வருவாயில் தளைத்தோங்குகிறது.

ஆனால் இந்த வருவாயில் முழுக்க ஏராளமான பொது மக்களின் கண்ணீர் குரலும், சாபமுமே நிறைந்து காணப்படுகிறது. ஒவ்வொரு நாளும் நாகரிக கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களும் ஆண்களுக்கு நிகராக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். மதுவிற்கு அடிமையாகி தவிக்கும் ஆண்களால் அவனை நம்பியிருக்கும் குடும்பமும், குழந்தைகளும் நடுதெருவில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.  இதனை எந்த குடிமகனும் சற்றும் நினைத்து கூட பார்ப்பதில்லை.

தற்போது ஒரு தந்தையின் குடிப்பழக்கத்தினால் ஒரு ப்ளஸ் 2 மாணவனின் உயிரை பறித்துள்ளது. திருநெல்வேலி, சங்கரன்கோவில் ரெட்டியபட்டியை சேர்ந்த தினேஷ் என்ற ப்ளஸ் 2 மாணவன் சமீபத்தில் தான் பொது தேர்வு எழுதி முடித்துள்ளான். இவரது தந்தை பெயர் மாடசாமி. தினேஷ், தனது தந்தையான மாடசாமியிடம் குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு ஒவ்வொரு நாளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளான். எவ்வளவு பாடுபட்டும் தந்தை தனது குடிப்பழக்கத்தை நிறுத்தாததால் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு நெல்லையில் ரயில்வே சாலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளான்.

அந்த மாணவன் எழுதிய கடிதத்தில் "அப்பா நான் தினேஷ், இதை எழுதுறது நான் தான், நான் செத்துப்போனதுக்கு அப்புறமாவது குடிக்காம இரு, நீ குடிக்கிறது நாள எனக்கு கொல்லி போடாத, மொட்ட போடாத, எந்த காரியமும் பண்ணாத, மணி அப்பா தான் எல்லா பண்ணனும், இது தான் என் ஆசை, அப்பத்தான் என் ஆத்மா சாந்தியடையும். இனிமேலாவது தமிழகத்தில் பிரதமர், முதலமைச்சர் மதுபான கடைகளை அகற்றுகிறார்களா என்று பாப்போம், இல்லை என்றால் நான் ஆவியாக வந்து மதுபான கடைகளை ஒழிப்பேன் " என தினேஷ் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். இந்த செய்தி தற்போது அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு நாளும் குடிப்பழக்கத்தால் சாலை விபத்துக்கள், கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அகற்ற கோரி தொடர்ந்து போராட்டங்களும் கலவரங்களும் நடந்து தான் வருகின்றன. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அதிக வருமானம் ஈட்டும் டாஸ்மாக்கை அகற்றுவதற்கு அரசாங்கம் முன்வர மறுக்கிறது. இதற்கு காரணம் மக்கள் எப்படி போனாலும் கவலை இல்லை, எங்களுக்கு 'வருமானமே முக்கியம்' என்று அலட்சியமாக உள்ளனர். இன்னும் எத்தனை உயிர்களை பலி வாங்குமோ தெரியவில்லை. இறந்த மாணவரின் குடும்பத்தாருக்கு அரசாங்கம் இழப்பீடு தொகையை அறிவிக்குமே தவிர உயிரிழப்புகளை குறைக்க அரசாங்கம் மதுபானக்கடைகளை அகற்றுவதற்கு வாய்ப்பே இல்லை. 

தந்தையின் குடிப்பழக்கம் ப்ளஸ்2 மாணவன் உயிரை பறித்த அவலம்