ads
கோவையில் உள்ள அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Nov 30, 2017 20:29 ISTஇந்தியா
ரங்கசாமி கவுண்டன் புதூரை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் ரகு சிங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவு மீது மோது கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே ரகு உயிரிழந்துள்ளார். இது குறித்து சிங்காநல்லூர் தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் என்பவர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். ரகு அமெரிக்காவில் வேலை பார்த்து வந்துள்ளார். தனது திருமணத்திற்காக பெண் பார்க்க வந்த நிலையில் இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுமதியின்றி அ.தி.மு.க வினர் விளம்பர பேனர்களை வைத்ததால் இந்த விபத்து நேர்ந்ததாக அரசியல் பிரமுகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனை அடுத்து தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் கோவையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில் "மனுதாரர் அளித்துள்ள புகைப்படங்களையும் ஆதாரங்களையும் பார்க்கும்போது அனுமதியின்றி பேனர்கள், கடவுட்டுகள், அலங்கார வளைவுகள் வைத்துள்ளது தெரிகிறது. இதனால் தான் ரகு இறந்திருப்பார் என்று யோசிக்க தோன்றுகிறது. ஆகவே கோவையில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களையும் உடனே அகற்ற வேண்டும். அனுமதி பெறப்பட்டவையாக இருந்தாலும் விதிமுறைகளை மீறி இருந்தால் அவற்றையும் அகற்ற வேண்டும். விபத்தில் பலியான ரகு குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளது.