இன்று சார்லி சாப்ளின் இறந்த தினம்
மோகன்ராஜ் (Author) Published Date : Dec 25, 2017 14:20 ISTஇந்தியா
கிறிஸ்துமஸ் தினமான இன்றைய நாளில் தான் சிறந்த நாடக கலைஞரான சார்லி சாப்ளின் இறந்துள்ளார். இன்றைய சினிமா துறையில் காமெடி என்பது மிகவும் பிரபலம். ரசிகர்களை சிரிக்க வைக்க அவர்கள் படும் பாடு அவர்களுக்கு தான் தெரியும். இன்றைய சூழல் அவர்களுக்கு எவ்வளவோ பரவாயில்லை. ஆனால் அன்றைய காலகட்டத்தில் உச்சரிப்பில்லாமல் வெறும் நடிப்பில் மட்டும் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளனர். தற்போதுவரை இவர்களின் நடிப்பு திறமை உலகெங்கும் பேசப்பட்டு வருகிறது. இதில் சிறந்த நாடக கலைஞரான சார்லி சாப்ளினும் ஒருவர். இவர் ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர்.
இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன. சாப்ளின், இலண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பெற்றோர் இருவரும் மியூசிக் ஹால் கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து இவர்களது திருமண வாழ்க்கை முறிந்தது. சாப்ளின் தனது அன்னையின் கண்காணிப்பில் வளர்ந்தார்.
1896ஆம் ஆண்டில் ஹாரியட்டிற்கு வேலை ஏதும் கிடைக்காத நிலையில், சார்லியும் அவரது சகோதரர் சிட்னியும் லாம்பெத் வொர்க்கவுசில் இருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் இருவரும் Hanwell School for Orphans and Destitute Children என்னும் ஆதரவற்றோருக்கான பள்ளி ஒன்றில் வளர்ந்தனர். இதற்கிடையில், சாப்ளினின் தந்தை குடிப் பழக்கத்தால் உடல் நலம் குன்றி சாப்ளினின் பன்னிரண்டாவது வயதில் இறந்தார். இதனால் இவர் தாயும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி கிராய்டனில் இருந்த கேன் ஹில் அசைலம் (Cane Hill Asylum) என்ற மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டார். பின்பு இவரும் 1928ஆம் ஆண்டில் இறந்தார்.
சாப்ளின் ஐந்து வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார். முதன் முதலில் 1894ஆம் ஆண்டில் மியூசிக் ஹாலில் தனது தாய்க்குப் பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார். சிறுவனாக பல நாட்கள் உடல் நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருந்தபொழுது, இரவுகளில் அவரது தாய் சன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார். சாப்ளினுக்கு பத்து வயதாக இருந்த பொழுது சிட்னி இலண்டன் ஹிப்போட்ரோமில் சின்ட்ரெல்லா பாண்டோமைமில் ஒரு பூனையாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார்.
1903ஆம் ஆண்டில் "ஜிம், எ ரொமான்ஸ் ஆஃப் காக்கைய்ன்" (Jim, A Romance of Cockayne) நாடகத்தில் நடித்தார். இதற்குப் பிறகு அவரது முதல் நிரந்தர வேலை கிடைத்தது - செர்லாக் ஹோம்ஸ் நாடகத்தில் செய்தித்தாள் விற்கும் சிறுவன் பில்லி வேடம். இதனைத் தொடர்ந்து கேசீஸ் கோர்ட் சர்க்கஸ் (Casey's Court Circus) நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும், Fred Karno's Fun Factory slapstick நகைச்சுவை நிறுவனத்தில் கோமாளி வேடத்திலும் நடித்தார். அமெரிக்காவின் குடிபெயர்வுப் பதிவுகளின்படி கார்னோ குழுவுடன் அக்டோபர் 2, 1912 - அன்று அமெரிக்கா வந்தடைந்தார். கார்னோ குழுவிலே ஆர்த்தர் ஸ்டான்லே ஜெப்பர்சனும் இருந்தார் - இவரே பின்னர் ஸ்டான் லாரலாக பிரபலமானார்.
இருவரும் சிறிது காலம் ஒரே அறையில் தங்கினர். தயாரிப்பாளர் மாக் செனட், சாப்ளினின் திறமையைக் கவனித்து அவரது நிறுவனமான கீஸ்டோன் திரைப்பட நிறுவனத்தில் (Keystone Film Company) சேர்த்துக் கொண்டார். முதலில் சாப்ளினுக்கு கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக் கொள்வது சற்று கடினமாக இருந்தது. ஆனால் மிக விரைவில் தன்னைப் பழக்கிக் கொண்டு கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார். இவரது கிடுகிடு வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது அவர் தனக்கென்று உருவாக்கிக் கொண்ட நாடோடி வேடமும், நிறுவனத்தில் இவருக்கு இயக்கவும் புது படைப்புகள் படைக்கவும் கொடுக்கப்பட்ட உரிமையுமாகும். இவரது வளர்ச்சியையும், இவரது நிருவாகியாக பணிபுரிந்த சிட்னியின் ஆற்றலையும் சாப்லினின் சம்பளப் பட்டியல் எடுத்துக்காட்டியது.
இவர் 1919ஆம் ஆண்டில் மேரி பிக்போர்ட், டக்லஸ் ஃபேர்பேங்க்ஸ், கிரிபித்துடன் இணைந்து யுனைட்டடு ஆர்டிஸ்ட்ஸ் ஸ்டுடியோவைத் துவங்கினார். 1927ஆம் ஆண்டில் ஓசையுடன் கூடிய திரைப்படங்கள் வெளிவரத் துவங்கி மிகவும் பரவலானாலும் 1930ஆம் ஆண்டு வரை சாப்ளின் பேசும் படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். சாப்ளின் சினிமாவின் பல துறைகளில் கை தேர்ந்தவராகத் திகழ்ந்தார். 1952ஆம் ஆண்டில் வெளிவந்த லைம்லைட் திரைப்படத்தில் நடன அமைப்பையும் 1928ஆம் ஆண்டுத் திரைப்படம் "தி சர்க்கஸ்" படத்தின் தலைப்பு இசை அமைப்பையும் இவரே செய்தார். இவர் இசையமைத்த பாடல்களில் பெரும் புகழ் பெற்றது ஸ்மைல். சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார்.
மே 16, 1922-இல் ஆஸ்கார் விருதுகள் வழங்கியபொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை இல்லை. சாப்ளின் தி சர்க்கஸ் திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகளுக்குத் தேர்வானார். இவருக்கு விருது கிடைக்காதென்று இருந்த நிலையில், இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த அவருடைய பன்முகத்தன்மையையும் மேதைமையையும் பாராட்டிச் சிறப்பு விருது அளித்தார்கள். அதே ஆண்டு, தி ஜாஸ் சிங்கர் படத்துக்காக இன்னொரு சிறப்பு விருதை வழங்கினார்கள். திரைப்படத்தை இந்நூற்றாண்டின் கலை வடிவமாக்குவதில் அளவிடமுடியாத பங்காற்றியதற்காக 44 ஆண்டுகளுக்குப் பிறகு 1972ஆம் ஆண்டில் இரண்டாவது ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
சாப்ளின், 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில் இறந்தார். இவரது உடலை வாட்(Vaud) நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள். மார்ச் 1, 1978 ஆம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று, திருடர்கள் பிடிபட்டனர். பதினொரு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் சாப்ளினின் உடலைக் கைப்பற்றினார்கள். சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்துள்ளனர்.
இவரை பற்றிய மேலும் சுவையான செய்திகள் :
சாப்ளினின் கண்கள் நீல நிறத்தில் இருந்தன. கருப்பு வெள்ளைப் படங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்க்கும்பொழுது பெரிதும் வியப்புற்றனர். சாப்ளின் நல்ல சதுரங்க ஆட்டக்காரர். இதனை பிரபல ஆட்டக்காரர் சாமி ரிஷவெஸ்கியிடம் பயின்றார். சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பலவற்றை நடத்தினார்கள். ஒரு முறை அப்போட்டி ஒன்றில் சாப்ளின் இரகசியமாகப் பங்கு பெற்றார். இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது.