தெலுங்கு ரீமேக் படத்தில் இருந்து விலகிய நடிகர் விஷ்ணு விஷால்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 31, 2017 13:50 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த 'கதா நாயகன்' படத்தினை தொடர்ந்து விஷ்ணு விஷால், ராம்குமார் இயக்கத்தில் 'ராட்சசன்(சிண்ட்ரெல்லா)' , செல்லா இயக்கத்தில் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', சீனு ராமசாமி இயக்கவிருக்கும் 'இடம் பொருள் ஏவல்', எழில் இயக்கத்தில் பெயரிடப்படாத புது படம் போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் செந்தில் வீராசாமி இயக்கத்தில் ‘பொன் ஒன்று கண்டேன்’ என்ற படத்தில் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த‘பெல்லி சூப்புலு’ ரீமேக் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்தார்.
இந்த தெலுங்கு படத்தினை தருண் பாஸ்கர் தாஷ்யம் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நாயகனாக விஜய் தேவரகொண்டா நடிக்க இவருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்திருந்தார்.இப்படம் தெலுங்கு திரையுலகில் அதிகளவு வெற்றி பெற்றதின் காரணத்தினால் தமிழில் ரீமேக் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். ‘கொண்டாடுவோம் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனனுக்கு சொந்தமான ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் தர்புக சிவா இசையமைக்க எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில் ஈடுபட இருந்தார். மேலும் படத்தொகுப்பு பணியில் பிரவீன் ஆண்டனி மற்றும் பாடலாசிரியராக தாமரை போன்றவர்கள் இப்படத்தில் இணைந்திருந்தனர்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்திருந்தது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு காலதாமதமாவதினால் நடிகர் விஷ்ணு விஷால் இப்படத்தில் இருந்து விலகியதாக தகவல் வந்திருந்திருந்தது. இந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக விஷ்ணு விஷால் அவரது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.