ads
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிக்பாஸ் ஜூலி இரட்டை வேடத்தில் நடிக்கும் அம்மன் தாயி
விக்னேஷ் (Author) Published Date : Jun 01, 2018 17:39 ISTபொழுதுபோக்கு
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். இதனால் தமிழகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் ஜூலி. இந்த நிகழ்ச்சியினால் இவருக்கு பட வாய்ப்புகளுக்கு வருகிறது. அந்த வகையில் முன்னதாக விமல் நடிப்பில் வெளியான மன்னர் வகையறா படத்தில் க்ளைமேக்சில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு தங்கச்சியாக நடித்து வரும் இந்த படத்திற்கு பிறகு நாயகியாக 'அம்மன் தாயி' என்ற படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முந்தைய காலங்களில் ரோஜா, மீனா, ரம்யா கிருஷ்ணன் இவர்களுக்கு பிறகு ஜூலியும் அம்மனாகவும், படத்தின் நாயகி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நாயகன், வில்லன் போன்ற அனைத்து கதாபாத்திரத்திலும் புது முகங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்ற பணிகளை மகேஸ்வரன் - சந்திரசேகரன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். இந்த படம் குறித்து மகேஸ்வரன் சந்திரசேகரன் ஆகியோர் கூறுகையில் "இந்த படம் முழுக்க முழுக்க பக்தி மையமான சமூகம் சார்ந்த படம். இந்த படத்தில் பிக்பாஸ் ஜூலி நாயகி மற்றும் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அம்மனை கட்டுப்படுத்த நினைக்கும் வில்லனை அம்மன் எப்படி அழிக்கிறார் என்பது படத்தின் கதை. தமிழர்களின் கலாச்சாரத்தில் ஒன்று முளைப்பாரி எடுத்தல், இதிலிருந்து அம்மன் எப்படி எழுகிறார் என்பது இந்த படத்தின் சிறப்பம்சம். இந்த படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஜூலி தயங்கினார். அம்மன் கதாபாத்திரம் நமக்கு பொருந்துமா? என்றும் கிருஸ்துவத்தை சேர்ந்தவர் அம்மன் படத்தில் எப்படி நடிப்பது என்றும் யோசித்தார்.
பின்பு அவரை அம்மன் வேடத்தில் புகைப்படம் எடுத்து காட்டியபோது அவரே மெர்சலாயிட்டார். அந்த அளவுக்கு அந்த கெட்டப் கச்சிதமாக இருந்தது. இந்த படத்தில் வில்லனை நடனம் ஆடிக்கொண்டே வதம் செய்யும் காட்சிகளில் நடிக்க பயிற்சியை மேற்கொண்டு நடித்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் மதுரையில் 30 நாட்கள் நடைபெற்றது. இந்த படத்தின் முக்கிய காட்சிகளை மட்டும் ஆந்திர மாநிலத்தில் படமாக்கி வருகிறோம். இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே மீதம் உள்ளது" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.