ads
நாயகனாக மாறிய மற்றொரு காமெடி நடிகர் காளி வெங்கட்
விக்னேஷ் (Author) Published Date : Sep 27, 2018 17:22 ISTபொழுதுபோக்கு
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகருள் ஒருவர் காளி வெங்கட். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது காமெடி நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். இவருடைய காமெடிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு இருந்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் இவருடைய நடிப்பில் 8 படங்கள் வெளியானது. இந்த ஆண்டும் இவருடைய நடிப்பில் நாகேஷ் திரையரங்கம், காத்தாடி, இரும்பு திரை, கஜினிகாந்த் போன்ற படங்கள் வெளியாகியுள்ளது.
இப்படி காமெடி நடிகராக பல படங்களில் நடித்து வரும் இவர் தற்போது நாயகனாக மாறியுள்ளார். காமெடி நடிகர்கள் நாளடைவில் ஹீரோவாக மாறுவது வழக்கமாக இருந்தாலும் அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. இந்த வாய்ப்பு தற்போது நடிகர் காளி வெங்கட்டுக்கு கிடைத்துள்ளது. இயக்குனர் பாரதி பாலா என்பவர் இயக்க உள்ள 'பற பற பற' என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் இவருக்கு அப்பா கதாபாத்திரம்.
இவருடைய மகன்களாக கோகுல், மதன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் முழுக்க பள்ளிப்பருவ மாணவர்களின் வாழ்க்கை கதையை சார்ந்தது. ஒரு விவசாயி மகன் தனியார் பள்ளியில் படிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அரசு பள்ளிகளில் கல்வி தரமற்று கிடப்பதால் சாமானிய ஏழை மக்களின் பார்வையும் தனியார் பள்ளியின் பக்கம் திரும்பியுள்ளது. ஆனால் தற்போதுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இரண்டுமே மாணவர்களை, ஒரு புத்தகத்தை மனப்பாடம் செய்யும் இயந்திரமாக நடத்தி வருகிறது.
இது வழக்கமாக நடைபெற்று வரும் கொடுமை தான். இந்த படத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி என்று ஆசை காட்டியதால் அதனை நம்பி காளி வெங்கட்டின் பிள்ளைகளும் தனியார் பள்ளிகளில் சேர்கின்றனர். ஆனால் அதன் பின்னணியில் நடக்கும் அரசியல், அதன் திட்டம் என்ன என்பது தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில் காளி வெங்கட்டுடன் மைம் கோபி, ஜான்வி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் என்பவர் இசையமைக்கிறார்.