Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

முடிவுக்கு வருகிறது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க போராட்டம்?

தயாரிப்பாளர் போராட்டத்தில் நிலவி வரும் குழப்பங்களால் விரைவில் போராட்டம் முடிவுக்கு வருகிறது.

தமிழகம் முழுவதும் தற்போது தயாரிப்பாளர் சங்க போராட்டம் காரணமாக புதிய படங்கள் வெளியாகாததால் திரையரங்குகள் வெறிசோடி காணப்படுகிறது. கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் புதிய படப்பிடிப்புகளும், டீசர் மற்றும் இசை போன்ற எந்தவித இசைநிகழ்ச்சிகளும் நடைபெறாது என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதன் படி தற்போதுவரை புதிய படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறாமல் ஏராளமான நடிகர்கள் முதல் ஒளிப்பதிவாளர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விஜய் 62, நாடோடிகள் 2, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மற்றும் பெயரிடப்படாத புதிய படத்திற்கும் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தமிழ் திரைத்துறையினரிடம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த சர்ச்சையினால் ஏராளமான தயாரிப்பாளர்கள் எப்படி அவர்களது படங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படலாம்?..என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏராளமான தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக கிளம்பியுள்ளதால் இந்த போராட்டம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது.

இது குறித்து சமீபத்தில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான மனோபாலா அளித்த பேட்டியில் "என்னுடன் சேர்த்து ஏராளமான நடிகர்கள் இந்த தயாரிப்பாளர் போராட்டத்தால் பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு நடிகர் சங்கம் ஏதாவது பதிலை அளிக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் போராட்டம் என்று களத்தில் இறங்கி விட்டால் எந்த படப்பிடிப்பையும் அனுமதிக்க கூடாது. அனுமதி அளிக்க பட்ட படங்களில் சமுத்திரக்கனியின் 'நாடோடிகள் 2' படம் ஓரிரு நாளில் முடியும் தருவாயில் இருந்ததால் அனுமதி அளிக்கப்படலாம்.

ஆனால் விஜய் படத்தின் படப்பிடிப்பு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது. அதற்கு ஏன் அனுமதி அளிக்கிறார்கள்?.இதனால் ஒரு தயாரிப்பாளராக நானும் என்னுடைய படத்திற்கு அனுமதி வழங்குமாறு மனு கொடுப்பேன். இது தவறானது. தயாரிப்பாளர் போராட்டம் நியாயமான ஒன்று. நிச்சயம் இந்த போராட்டத்தின் மூலம் அனைத்து தயாரிப்பாளர்களும் நன்மை அடைவார்கள். ஒரு போராட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால் அவர்களது முடிவை எக்காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது." என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவர் மட்டுமல்லாமல் ஏராளமான தயாரிப்பாளர்கள் சில படங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதால் மன வேதனை அடைந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து நேற்று தயாரிப்பாளர் சதிஷ் குமார் தனது டிவிட்டரில் "நடிகர் விஜயின் 62வது படத்தின் படப்பிடிப்பு விக்டோரியா ஹாலில் நடந்துள்ளது. இதில் தயாரிப்பாளர் ஒற்றுமை எங்கே?..அவர்களுக்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கலாம்?.." என்று எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

தற்போது திரைத்துறையில் சிறு பட்ஜெட் முதல் பல முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் வரை வெளிவருகிறது. இதில் முன்னணி நடிகர்கள் படங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுவதால் சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் இயக்குனர் ஆர் கண்ணன் தற்போது இயக்கி வரும் 'பூமராங்' படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்குமாறு மனு கொடுத்திருந்தார்.

இந்த படப்பிடிப்பிற்காக கஷ்டப்பட்டு பல நடிகர்களை ஒன்றிணைத்து பெரும் பொருட் செலவில் செட்டை அமைத்துள்ளோம். இதனால் 15 நாட்கள் மட்டும் அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் சில படங்களுக்கு மட்டும் அனுமதி அளித்திருப்பது வருந்தத்தக்கது. மேலும் சமீபத்தில் திருப்பூர் சுப்பிரமணி அவர்கள் தயாரிப்பாளர்கள் முன்னணி நடிகர்கள் கோடி கோடியாய் வாங்கும் சம்பளத்தை பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள் என்று ஆடியோ பதிவு செய்து வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட பலர் தங்களது படங்களுக்கு 20 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனை முன்னணி நடிகர்கள் குறைத்து கொள்ள வேண்டும் என்று நடிகர் விவேக் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தற்போது நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சித்தார்த் தனது டிவிட்டரில் "தற்போதுள்ள கடுமையான சினிமா துறையில் ஒவ்வொரு படமுமே பல இன்னல்களை சந்திக்கிறது. இதனால் ஒரு படத்திற்கு படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டால் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும். அனைவரும் ஒன்றே தான். இதில் சமநிலையும் ஒற்றுமையும் இல்லாமல் போனால் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என்று அவர் பதிவு செய்துள்ளார் .

இதனால் தற்போது தயாரிப்பாளர் சங்க போராட்டங்களில் நிலவி வரும் குழப்பங்களாலும், சர்ச்சைகளாலும் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.

முடிவுக்கு வருகிறது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க போராட்டம்?