ஐபிஎல் போட்டிகள் போல தமிழ் திரைப்படங்களின் வெளியீடுகளும் ஒத்திவைக்கப்படுமா
வேலுசாமி (Author) Published Date : Apr 18, 2018 10:42 ISTபொழுதுபோக்கு
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் 11வது சீசனில் கலந்து கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழகத்தில் இருக்கும் மவுசு அளவற்றது. ஆனால் தற்போது தமிழகத்தில் திரும்பும் திசையெல்லாம் காவிரி நீர் கேட்டு தமிழக மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டங்கள் ஒரு மாதத்தை கடந்தும் மத்திய அரசு செவிடன் போல் உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.
என்ன செய்வதறியாமல் பொது மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்கள் செவிடன் (மத்திய அரசு) காதில் சங்கு ஊதியது போலதான் மக்களுக்கு காணப்படுகிறது. தமிழர் உரிமைக்கான இந்த போராட்டத்திற்கு ஏராளமான பொதுநல அமைப்புகள், நடிகர் சங்கம், வணிகர் சங்கங்கள் போன்றவை ஆதரவு தெரிவித்து போராடி வந்தது. தமிழகத்தில் போராட்டங்களாக காணப்படும் நிலையில் ஐபிஎல்லை எதிர்த்தும் போராடி வந்தனர். கடும் போராட்டங்களுக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொண்டது.
இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிதம்பரம் மைதானத்தில் வரும் ஏப்ரல் 20, 28, 30 மற்றும் மே 5, 13,20 போன்ற தேதிகளில் விளையாட உள்ளது. முன்னதாக நடைபெற்ற போட்டியின் போது ஏற்பட்ட போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் போன்றவற்றை காவல் துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இனிவரும் போட்டிகளில் ஏற்படும் போராட்டங்களை கட்டுப்படுத்த முடியாது என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதனால் சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அங்கு நிலவி வரும் தண்ணீர் பிரச்சனை காரணமாக அதற்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவிரி பிரச்சனையில் நிகழ்ந்து வரும் தொடர் போராட்டங்களுக்கு ஆதரவாக உதயநிதி ஆலோசனை வழங்கியுள்ளார், அதில் "ஐபில் போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா.. ? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே.." என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இவரின் இந்த கருத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் ஐபிஎல்லில் இவர்களின் தலைமையில் சன்ரைசஸ் அணியும் விளையாடி வருகிறது. இதனால் ஏராளமானோர் "உங்களோட சன்ரைசஸ் அணியும் விளையாடாம இருக்க சொல்லுங்க.." என்றும், 'கலைஞர் டிவியில் ஒளிபரப்படும் சீரியல்களை முதலில் நிறுத்துங்க..' என்றும் டிவிட்டரில் உதயநிதியை வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.