கமல்ஹாசனுக்காக தனது சின்னத்தை விட்டுக்கொடுத்த தமிழர் பாசறை
வேலுசாமி (Author) Published Date : Feb 27, 2018 16:10 ISTPolitics News
நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி மதுரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தனது கட்சியின் பெயரையும், சின்னத்தையும் அறிவித்தார். கமல் ஹாசன் அறிவித்த மக்கள் நீதி மய்யம் லோகோவில் 3 கைகள் வெள்ளை நிறத்திலும் 3 கைகள் சிவப்பு நிறத்திலும் நடுவில் நட்சத்திரம் போன்ற தொரு அமைப்பு இருந்தது.
இந்த லோகோ மும்பை செம்பூரில் உள்ள தமிழர் பாசறை அமைப்பின் லோகோவை போன்று உள்ளதாக ஏராளமானோர் கருத்து பதிவு செய்து வந்தனர். இது குறித்து பல வாதங்கள் எழுந்த நிலையில் தற்போது அதற்கு முடிவு கிடைத்துள்ளது.
நடிகை ஸ்ரீதேவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்படும்போது சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், தமிழர் பாசறை அமைப்பினர் என் மீது கொண்ட அன்பினால் தனது அமைப்பின் முத்திரையின் உரிமையை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளதாக தெரிவித்தார்.
இதன் பிறகு பேசிய தமிழர் பாசறை அமைப்பை சேர்ந்த ராஜேந்திர சுவாமி "நடிகர் கமல்ஹாசன் கட்சி சின்னத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள முத்திரையும் எங்களது தமிழர் பாசறை முத்திரையும் ஒத்து போவதால் அவர் கட்டவுள்ள ஜனநாயக கோவிலுக்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும் வகையில் எங்களது முத்திரை உரிமையை அவர் பயன்படுத்தி கொள்ள நாங்களாகவே ஒப்புதல் அளித்துள்ளோம். கமல் ஹாசனின் அரசியல் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்து தெரிவிக்கவே அவரை சந்தித்தோம்." என்று தெரிவித்துள்ளார்.