ads
இனி கூகுள் மேப்பில் வழிகாட்டுதலுக்கு உதவும் அனிமேஷன் விலங்குகள்
விக்னேஷ் (Author) Published Date : May 11, 2018 17:44 ISTTechnology News
தற்போது மக்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து வருகிறது கூகிளின் கூகுள் மேப்ஸ் செயலி. தற்போதைய மக்கள் கைகளில் ஆண்டிராய்டு, ஆப்பிள் போன்ற ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் ஆன்லைனில் இயங்கும் செயலிகள் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இதில் கூகுள் மேப் செயலி முன்பின் அறிந்திராத ஒரு இடத்திற்கு செல்லவும், செயற்கைகோள் உதவியுடன் இருக்கும் இடத்தை துல்லியமாக அறியவும் மிகவும் உதவியாக இருந்து வருகிறது. இந்த செயலியானது கடந்த 2005முதல் 13 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.
வாடிக்கையாளர்களின் விமர்சனங்கள் மற்றும் தேவைகளுக்கேற்ப புது புது அம்சங்களை வழங்கி வருகிறது. சமீபத்தில் இருக்கும் இடத்தை மற்றவர்களுக்கு காண்பிக்கும் விதமான புதிய அம்சத்தை அப்டேட் செய்தது. இதனை அடுத்து சமீபத்தில் கலிபோர்னியாவில் நடந்த கூகுள் I/O 2018 என்ற நிகழ்ச்சியில் கூகுளின் செயலிகளில் பல புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு செயலிகளின் புதிய அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டது.
இதில் கூகுள் மேப்ஸின் அப்டேட் குறித்து கூகுள் துணை தலைவர் அபர்ணா சென்னப்பிரகாடா என்பவர் விளக்கினார். இந்த அப்டேட் மூலம் கூகுள் மேப் செயலியில் தத்ரூபமான காட்சிகளுடன் கூகுள் மேப்பை பயனாளர்களுக்கு காண்பிக்க உள்ளனர். பயனாளர்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தை தேடும் போது இருக்கும் இடத்தில் இருந்து தேடிய இடத்தை அடைய அனிமேஷன் மூலம் உருவாக்கப்பட்ட விலங்குகள் வழிகாட்டுதலாக இருக்கும். மேலும் இதன் மூலம் குறிப்பிட்ட இடத்தில் உள்ள உணவகங்கள், விடுதிகள், விமான நிலையங்கள் போன்றவை தாமாகவே காண்பிக்கபடும்.
இது தவிர யுவர் மேட்ச் (Your Match) என்ற புதிய அம்சங்கள் மூலம் நீங்கள் உணவகங்களுக்கு செல்லும் அங்கு எந்த மாதிரியான உணவுகள் தயாரிக்கப்படுகிறது. உங்களுக்கு பிடித்தமானவை எவை, மக்களின் மனதை கவர்ந்த உணவகமா போன்ற பல தகவல்களை காண்பிக்கின்றன. மேலும் பார் யூ (For You) என்ற அம்சம் மூலம் நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் நடக்கும் நிகழ்ச்சிகள், சிறந்த இடங்கள் போன்றவையும் உங்களுக்கு காண்பிக்கப்படும். விரைவில் இணையதளம், ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் மொபைல்களிலும் அறிமுக படுத்தவுள்ளனர். இந்த புதிய அப்டேட் கட்டாயம் பயனாளர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என கூகுள் துணை தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.