ads
சர்வதேச அளவில் பணக்கார நகரங்களின் பட்டியலில் மும்பை 12வது இடம்
வேலுசாமி (Author) Published Date : Feb 12, 2018 15:00 ISTWorld News
இந்தியா
நியூ வேர்ல்டு வெல்த் என்ற நிறுவனம் சர்வதேச அளவில் செல்வச் செழிப்பு மிக்க நகரங்களை ஆய்வு செய்து தற்போது 15 நகரங்களை வரிசைப்படுத்தி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நகரங்களிலும் வசிக்கும் அனைத்து தனிநபர்களின் மொத்த சொத்துமதிப்பு அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பை 12 வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் நியூயார்க் 3 லட்சம் கோடி டாலர் சொத்துமதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதன் பிறகு லண்டன் இரண்டாவது இடத்திலும் (2.7 லட்சம் கோடி டாலர்), டோக்கியோ (2.5 லட்சம் கோடி டாலர்) மூன்றாவது இடத்திலும் உள்ளது. மேலும் சான் பிரான்சிஸ்கோ (2.3 லட்சம் கோடி டாலர்) நான்காவது இடத்திலும், பீஜிங் (2.2 லட்சம் கோடி டாலர்) சொத்துமதிப்புடன் ஐந்தாவது இடத்திலும், ஷாங்காய் (2 லட்சம் கோடி டாலர்) சொத்துமதிப்புடன் ஆறாவது இடத்திலும் உள்ளது.
இதனை அடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் (1.4 லட்சம் கோடி டாலர்), ஹாங்காங் (1.3 லட்சம் கோடி டாலர்), சிட்னி (1 லட்சம் கோடி டாலர்), சிங்கப்பூர் (1 லட்சம் கோடி டாலர்), சிகாகோ (98,800 கோடி டாலர்) போன்ற நகரங்கள் உள்ளது. இந்த 15 நகரங்களின் பட்டியலில் சான் பிரான்சிஸ்கோ, பீஜிங், ஷாங்காய், மும்பை மற்றும் சிட்னி ஆகிய நகரங்கள் தனிநபர்களின் சொத்துமதிப்பு வளர்ச்சி வேகத்தின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னிலையில் உள்ளதாகவும் நியூ வேர்ல்டு வெல்த் ஆய்வறிக்கை கூறுகிறது.
மேலும் மிக குறைந்த மதிப்புடன் ஹூஸ்டன், ஜெனிவா, ஒசாகா, சியோல், ஷென்ஜென், மெல்போர்ன், ஜூரிச், டல்லாஸ் போன்ற நகரங்கள் 15 பணக்கார நகரங்கள் பட்டியலில் இடம் பிடிக்கத் தவறி விட்டது. தற்போது மும்பையில் வாழும் தனிநபர்களின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு 95,000 கோடி டாலர். இதன் மூலம் இந்த நகரம் தற்போது 12 வது இடத்தை பிடித்துள்ளது. பின்னர் டாரன்ட்டோ 94,400 கோடி டாலர் சொத்துமதிப்புடன் 13 வது இடத்திலும், பிராங்க்பர்ட் 91,200 கோடி டாலருடன் 14 வது இடத்திலும் உள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் 15 வது இடத்தில் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள தனிநபர்களின் மொத்த சொத்துமதிப்பு தற்போது 86,000 கோடி டாலராக உள்ளது.