ads
தொழிலதிபர் நீரவ் மோடி கடைகளில் இருந்து 5100 கோடி மதிப்பிலான தங்கம் வைரம் பறிமுதல்
வேலுசாமி (Author) Published Date : Feb 15, 2018 23:16 ISTஇந்தியா
வைர நகை வியாபாரியான நிரவ் மோடி குஜராத்தை சேர்ந்தவர். இவர் உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தனது நகை கடைகளை வைத்துள்ளார். இதற்கிடையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து கிட்டத்தட்ட 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக வங்கி சார்பில் சிபிஐ அலுவலகத்தில் நேற்று இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டது.
முறையான ஆவணங்களை அளிக்காமல் 280 கோடி ரூபாய் முறைகேடாக கடன் பெற்றதாக கூறி ஏற்கனவே நீரவ் மோடி மீது கடந்த மாதம் 29-ஆம் தேதி பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதனை தொடர்ந்து 31-ஆம் தேதி அவருடைய நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தற்போது நேற்று அளித்த புகாரை அடுத்து நிரவ் மோடி சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக மும்பையில் அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் நீரவ் மோடி கடந்த மாதம் முதல் தேதியிலே இந்தியாவை விட்டு தப்பி ஓடிவிட்டார் எனவும் தகவல்கள் கூறுகின்றது.
நிரவ் மோடி மட்டுமின்றி அவரது மனைவி மற்றும் சகோதரர் உள்பட இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்களும் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் கடந்த மாதம் சிபிஐ வழக்குப்பதிவு செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், நிரவ் மோடிக்கு சொந்தமான 17 கடைகளில் இன்று நடத்தப்பட்ட சோதனையில், ரூ.5100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரங்கள் மற்றும் விலை மதிப்பு மிகுந்த கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பறிமாற்ற தடுப்புச்சட்டத்தின் கீழ் மேற்கண்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
வங்கிக்கணக்கில் இருந்த 3.9 கோடி ரூபாய், நிரந்தர வைப்பு நிதியும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். சோதனையில் பல முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.