ads
உடுமலை சங்கர் கொலைவழக்கில் 6 பேருக்கு தூக்கு
புருசோத்தமன் (Author) Published Date : Dec 12, 2017 18:31 ISTஇந்தியா
திருப்பூர் மாவட்டம் குமாரலிங்கத்தை சேர்ந்த சங்கர் (22) என்பவரும் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுசல்யா (19) என்பவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இருவரின் குடும்பத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. உடுமலை பஸ் நிலையத்திற்கு இருவரும் கடந்த ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த ரவுடி கும்பல் சங்கர் - கவுசல்யா இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த கவுசல்யா அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இது குறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து கூலிப்படை மூலம் கொலை செய்ததற்காக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மதன், ஜெகதீசன், மணிகண்டன், கலை தமிழ்வாணன், மற்றொரு மணிகண்டன், தன்ராஜ், பிரசன்ன குமார், மாமன் பாண்டித்துரை, மற்றும் செல்வகுமார் ஆகிய 11 பேரை கைது செய்தனர். கடந்த ஓராண்டாக நடந்த இந்த வழக்கில் தற்போது கவுசல்யாவின் தந்தை உள்பட 8 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தாய் அன்னலட்சுமி, பிரசன்ன குமார், மாமன் பாண்டித்துரை ஆகியோரை நீதிமன்றம் விடுவித்தது. குற்றவாளிகளுக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறு குற்றவாளி தரப்பு வக்கீல் தெரிவித்தார். ஆனால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் அரசு தரப்பு வக்கீல் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி, கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, சின்னசாமியின் நண்பர் ஜெகதீசன், கலை தமிழ்வாணன், மதன், செல்வகுமார், மணிகண்டன் ஆகிய 6 பேருக்கு பிரிவு 302-ன் கீழ் அதிக பட்ச தண்டனையான மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ஸ்டீவன் தண்டராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு மரண தண்டனையுடன் 1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.