ads

கேரளாவில் பந்த் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கேரளாவில் பந்த் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு Imagecredit: Twitter@klnithin

கேரளாவில் பந்த் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு Imagecredit: Twitter@klnithin

மார்ச் 20ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஏப்ரல் 2ஆம் தேதி வட மாநிலங்களில்  பாரத் பந்த் நடைபெற்றது. அந்த தீர்ப்பின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் போலீஸ்காரர்களுக்கு சில வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தலித் ஒருவர் மற்றவர் மீது குற்றம் சாட்டுகையில், குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை என்றும் குற்றம் உண்மையானதுதானா என்று முதற்கட்ட விசாரணைக்குப் பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இந்த தீர்ப்பானது 1989 தலித்களுக்கு ஆதரவாக இயற்றப்பட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (SC /ST ) சட்டத்துக்கு  எதிரானதாகவும் குற்றவாளிகளை காப்பாற்றும் விதமாக உள்ளதாகவும்  நாடு முழுவதும் உள்ள தலித் அமைப்புகள் மத்திய அரசுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகவும் போராட்டத்தில் குதித்தன.  

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டிக்கும் விதமாக இன்று ஏப்ரல் 9ல் கேரளாவில் தலித் அமைப்புகள் மாநிலம் தழுவிய பந்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் முன்னின்று நடத்தும் இந்த போராட்டத்திற்கு  பல்வேறு தரப்பட்ட அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. 

திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி, கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடந்த வண்ணம் உள்ளன. கொச்சி அருகே பலர் கைது செய்யப்பட்டும் இருக்கிறார்கள். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பேருந்துகள் காவலாளிகள் துணை கொண்டு இயக்கப்படுகின்றன. பந்தின் காரணமாக பல்வேறு பல்கலைக்கழகங்களில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் மற்றொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

திருவனந்தபுரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைமை செயலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எர்ணாகுளம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி கோஷமிட்டனர். ஆதிவாசி கோத்ரா மஹா சபாவின் தலைவரான  கீதானந்தாவும் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன், இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "மோடி அரசாங்கம் ஒருபோதும் SC/ST சட்டத்தை நீர்த்துப்போக அனுமதிக்காது, இத்தகைய திருத்தங்களை மேற்கொண்டது உச்ச நீதிமன்றமே.  இதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று மத்திய அரசு ஏற்கனவே கோரியுள்ளது    " என்றார்.

கேரளாவில் பந்த் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு