ads
கல்லூரி மாணவி அஸ்வினியை படுகொலை செய்த அழகேசன் கைது
வேலுசாமி (Author) Published Date : Mar 10, 2018 11:33 ISTஇந்தியா
சென்னை கேகே நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு பிகாம் பட்டப்படிப்பு பயின்று வருபவர் அஸ்வினி. இவர் நேற்று பிற்பகலில் கல்லூரி முன்பு அழகேசன் என்பவரால் படுகொலை செய்யப்பட்டார். சென்னை மதுரவாயல் 6வது நகரை சேர்ந்தவர் சங்கரி-மோகன் தம்பதி. இவருக்கு 19வயதான அஸ்வினி மற்றும் அபி என்ற மகனும் இருந்தனர்.
இதில் அஸ்வினி தந்தையான மோகன் என்பவர் இறந்த நிலையில் அவரது தாயார் சங்கரி வீட்டு வேலை செய்து குடும்பத்தை சமாளித்து வருகிறார். இதில் அஸ்வினி என்பவர் 12-ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்ததால் கேகே நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பிகாம் சேர்ந்து பயின்று வருகிறார். இந்நிலையில் அவருக்கும் தனலட்சுமி நகர் 14-வது தெருவை சேர்ந்த அழகேசன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
அழகேசன் என்பவர் சென்னை முகப்பேறு அலுவலகத்தில் கொசு மருந்து அடிக்கும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த காதல் விவகாரம் அறிந்து அஸ்வினி தாயார் சங்கரி அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். பின்னர் மனமுடைந்த அவர் அழகேசன் பழக்கத்தை படிப்படியாக குறைத்து வந்துள்ளார். பின்னர் அழகேசன் என்பவர் அஸ்வினிக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். இதனால் அஸ்வினி மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதன் பிறகு போலீசார் அழகேசனை கண்டித்து அவர் பின்னால் சுற்ற மாட்டேன் என்று கையெழுத்து வாங்கியுள்ளனர். இதன் பின்பும் அழகேசன் அவரை பின் தொடர்வதை நிறுத்தவில்லை. ஒவ்வொரு நாளும் கல்லூரி முன்பு காத்திருக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நேற்று 2.30 மணியளவில் கல்லூரியை விட்டு வெளியே வந்து லோகநாதன் தெருவுக்குள் நடந்து சென்றார். பின் தொடர்ந்த அழகேசன் அஸ்வினியின் கையை பிடித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் திடீரென்று மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஸ்வினியின் கழுத்தில் குத்தியுள்ளார். பின்பு கீழே விழுந்த அஸ்வினியை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கவும் முயற்சித்துள்ளார். சத்தம் கேட்டு விரைந்து வந்த பொதுமக்கள் அழகேசனை மடக்கி பிடித்து உதைத்துள்ளனர். பின்னர் அஸ்வினியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பொதுமக்கள் அடித்ததில் படுகாயமடைந்த அழகேசனை காவல் அதிகாரிகள் கைது செய்து தற்போது கீழ்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அழகேசன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு சுவாதி என்ற பெண் என்ஜினீயர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனை தொடர்ந்து தற்போது அஸ்வினி கொலை வழக்கு அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.