ads
கருணைக்கொலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய திருநங்கை ஷானவி
வேலுசாமி (Author) Published Date : Feb 14, 2018 10:12 ISTஇந்தியா
ஷானவி பொன்னுசாமி, சென்னையை சேர்ந்த இவர் பிறக்கும் போது ஆணாக பிறந்தவர். இவர் ஏர் இந்தியாவின் வாடிக்கையாளர் தொடர்பு பிரிவில் சென்னை விமான நிலையத்தில் 13 மாதங்கள் பணி புரிந்துள்ளார். அதன் பிறகு வெளிநாட்டில் சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியுள்ளார். பின்னர் ஏர் இந்தியா நிறுவனத்தில் விமான பணிப்பெண் வேலைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளார்.
இதனை அடுத்து நேர்முக தேர்வில் திறமையாக செயல்பட்டும் அவரது பாலினம் காரணமாக அவருக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் தனக்கு வேலை வழங்க உத்தரவிடக்கோரி ஷானவி வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது வரை அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஷானவி தற்போது தனது வேதனையை தெரிவித்து உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில் , “‘உச்ச நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு ஏர் இந்தியாவும் மத்திய அரசும் தற்போதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. எனக்கு வேலை இல்லாததால் அன்றாட சாப்பாட்டு செலவுக்கு பணம் இல்லை. என்னால் வழக்கறிஞர்களுக்கு பணம் கொடுத்து வழக்கு நடத்தவும் முடியாது. எனவே, என்னை கருணைக்கொலை செய்ய உத்தரவிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஷானவி கூறுகையில் "தற்போது நான் மும்பையில் தான் வசித்து வருகிறேன். ஒவ்வொரு முறையும் டெல்லிக்கு நேர்முக தேர்விற்காக சென்று வருகிறேன். எனது பெற்றோர்களும் என்னை ஏற்க மறுத்துவிட்டதால் மிகுந்த சிரமத்தில் தான் டெல்லி சென்று வருகிறேன். மத்திய அரசு ஒவ்வொருவருக்கும் அடிப்படை தேவைகளான இருப்பிடம், உணவு, உடை போன்ற மூன்றையும் கிடைப்பதை செய்து வருவதாக சொல்லி வருகிறது.
ஆனால் திருநங்கைகளுக்கு இது மூன்றுமே கிடையாது. நான் படித்த படிப்பிற்கும் வேலை கிடைக்கவில்லை. வேலை கிடைத்தால் தானே உணவு, உடை போன்றவற்றை வாங்க முடியும். நமது நாடே எங்களை கண்டு கொள்ளாவிட்டால் தனியார் நிறுவனங்கள் எப்படி எங்களுக்கு வேலை கொடுக்கும். எங்களை மாதிரி திருநங்கைகள் கொஞ்ச காலத்திற்கு வேலைக்காக போராடுவார்கள், பின்னர் பிச்சை எடுத்தும், பாலியல் தொழில் செய்தும் வாழ்க்கை நடத்தி கொள்வார்கள்.
இதனால் தான் விமான போக்குவரத்து துறை சார்பில் எந்த பதிலும் வராமல் உள்ளது. இந்த வழக்கை தொடர எனக்கு அதிகப்படியான பணம் தேவைப்படுகிறது. இதனால் தான் கருணை கொலை செய்யுமாறு கடிதம் எழுதினேன்" என்று அவர் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.