ads
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பயங்கர தீ விபத்து
வேலுசாமி (Author) Published Date : Feb 03, 2018 11:16 ISTஇந்தியா
சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களில் மூல கோவிலாக விளங்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். 8 கோபுரங்களை கொண்டுள்ள இந்த கோவிலின் முன்பு ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கோவிலின் கிழக்கு வாசலில் அமைந்துள்ள கோபுரத்தின் முன்பு அமைந்துள்ள 30க்கும் மேற்பட்ட கடைகளில் திடீரெனெ தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீயானது ஏராளமான கடைகளை நாசப்படுத்தியுள்ளது. நேற்று திடீரெனெ இரவில் ஏற்பட்ட தீயினால் தகவல் அறிந்த பெரியார் நிலையம், தல்லாகுளம் பகுதியை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த கடுமையாக போராடி அணைத்துள்ளனர். மிகவும் குறுகிய பாதை என்பதால் தீயை கட்டுப்படுத்துவது கடினமாக இருந்துள்ளது. இந்த தீயை ஐந்து தீயணைப்பு வாகனங்களை கொண்டு அணைத்துள்ளனர். இந்த தீ விபத்தால் ஆயிரங்கால் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளளது. இந்த தீ விபத்து காரணமாக சுற்றியுள்ள பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் நான்கு கடைகளில் ஆர்மபித்த இந்த தீ சற்று நேரத்தில் அனைத்து இடங்களுக்கும் பரவியுள்ளது. முதலில் இருக்கும் ஏதாவது ஒரு கடைகளில் மின் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் தீ ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை. தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அந்த பகுதியை ஆய்வு செய்து உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார். இன்று காலை வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்ட கிழக்கு வாசலை தவிர்த்து மற்ற வாசலில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.