ads

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமனம்

எம்கே சூரப்பா அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்கே சூரப்பா அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர்கள் இன்றி மூன்று பேர் மட்டும் கொண்ட நிர்வாக குழுவால் இயங்கி வந்தது. தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் அவர்கள் பதவி ஏற்றபிறகு நீதிபதி சிர்புர்கர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு மூன்று பேர் கொண்ட பட்டியலை இறுதி செய்து ஆளுநருக்கு அனுப்பு வைத்தது.

இந்த பட்டியலில் சென்னை ஐஐடியின் கணித பேராசிரியர் பொன்னுசாமி, பெங்களூரு ஐஐசியை சேர்ந்த சூரப்பா மற்றும் மானிய குழுவின் துணைத்தலைவராக பதவி வகித்த தேவ்ராஜ் ஆகியோர் இடம் பிடித்திருந்தார். இதன் பிறகு புதிய துணை வேந்தராக பெங்களூரை சேர்ந்த எம்கே சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்று இரவில் அறிவிக்கப்பட்டது.

துணை வேந்தர் பதவிக்கான இறுதி பட்டியலை உறுதி செய்தபோதே கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை நியமிக்க கூடாது என்று பல அரசியல் பிரமுகர்களிடம் எதிர்ப்புகள் வலுத்தது. இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதற்கு முக ஸ்டாலின், அன்புமணி, ராம்தாஸ் என பல அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.

இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் "தமிழகத்தின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தும் வகையில், கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த எம்.கே. சூரப்பா என்பவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்திருக்கும்  ஆளுநரின் செயல் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராம்தாஸ் "கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை துணைவேந்தராக நியமித்தது கண்டனத்திற்குரியது; தமிழகத்தின் உயர் கல்வியை பிற மாநில கல்வியாளர்களிடம் ஒப்படைக்கக் கூடாது; நிர்வாகத்திறன் கொண்ட கல்வியாளர்கள் தமிழகத்தில் இல்லையா?..அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு மொத்தம் 170 பேர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் ஒரு தமிழருக்கு கூட துணைவேந்தராக நியமிக்கப்பட தகுதியில்லையா?.." என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பாஜக தலைவர் தமிழிசை "இஸ்ரோ தலைவராக தமிழர் இருக்கும்போது அண்ணா பல்கலை. துணை வேந்தராக சூரப்பா இருக்க கூடாதா?" என்று பதிலளித்துள்ளார். தமிழிசையின் இந்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமான பொது மக்கள் தங்களது கடுமையான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமனம்