ads
பள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்
புருசோத்தமன் (Author) Published Date : Aug 16, 2018 11:46 ISTஇந்தியா
தென்மேற்கு பருவமழை காரணமாக தற்போது கர்நாடகா, கேரளா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் லட்சக்கணக்கான மக்கள் வீடு நிலங்களை இழந்து அடிப்படை வசதிக்காக தவித்து வருகின்றனர். கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு கேரளாவில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அரசு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது கனமழையால் வீடுகளை இழந்து தவித்து வரும் பொது மக்களுக்கு உதவ சினிமா பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் முன்வந்துள்ளனர். மீட்பு பணிகளும் கனமழை என்று பாராமல் பொது மக்களுக்கு உதவி வருகின்றனர். கர்நாடகா மாநிலத்திலும் தொடர்ந்து ஏராளமான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு வரும் காவேரி நீரின் அளவு வினாடிக்கு 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் கரையோரம் உள்ள வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
தமிழகத்தில் மேட்டூர் அணையில் காவேரி நீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அங்கிருந்து வரும் காவேரி நீர், பள்ளிபாளையத்திலும் கரைபுரண்டு ஓடுகிறது. இதனை கண்டு பொதுமக்கள் பாலத்தின் மீது நின்று வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் பொது மக்கள் பாலத்தின் மீது நின்று வீடியோ எடுப்பது, வேடிக்கை பார்ப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பள்ளிபாளையத்தில் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் சுற்றியுள்ள வீடுகளுக்கும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.