ads
மார்ச் 16 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களை மூடி வேலை நிறுத்தம்
வேலுசாமி (Author) Published Date : Mar 09, 2018 10:50 ISTஇந்தியா
டிஜிட்டல் சேவைகளின் கட்டண உயர்வை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கம் கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் புதிய படங்கள் ஏதும் வெளிவராமல் தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் யாரும் வராததால் திரையரங்கின் வசூலும் குறைந்து ஏராளமான திரையரங்குகளில் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று சென்னையில் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதுமுள்ள திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
1. திரையரங்குகளுக்கான 8 சதவீத கேளிக்கை வரியை நீக்க வேண்டும்.2. ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க படும் லைசன்ஸ் உரிமையை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாக மாற்ற வேண்டும்.3. திரையரங்குகளின் இருக்கைகளை குறைத்து கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும்.4. பராமரிப்பு கட்டணம், குளிர்சாதன வசதி உள்ள திரையரங்கிற்கு ஒரு ரூபாயும், குளிர்சாதன வசதி இல்லாத திரையரங்கிற்கு 50 காசுகளும் வழங்கப்பட்டுள்ளது. இதனை 5 ரூபையாகவும், 3 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருகின்ற மார்ச் 16-ஆம் தேதி தியேட்டர்களை மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் அளித்த பேட்டியில் "அரசிடம் ஏற்கனவே உங்கள் கோரிக்கைகளை தெரிவித்துள்ளோம். இதனை ஏற்று அரசும் ஒப்பு கொண்டது. ஆனால் தற்போது வரை இதற்கான எந்தவித அரசு ஆணையும் பிறப்பிக்க வில்லை. இதனால் தியேட்டர்களை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.