ads
கரடியுடன் செல்பி எடுத்த பொது கரடி தாக்கியதில் வேன் ட்ரைவர் பலியான பரிதாபம்
வேலுசாமி (Author) Published Date : May 04, 2018 16:52 ISTஇந்தியா
இன்றைய மக்களிடையே ஆண்டராய்டு பயன்பாடு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் மிகவும் அதிகரித்துள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் புத்தகத்தை தவிர்த்து அதிகமாக லேப்டாப், செல்போன் முதலியவற்றிலே படித்து வருகின்றனர். அந்த அளவிற்கு செல்போன் பயன்பாடு இன்றைய மக்களிடம் கட்டாயமாகி விட்டது. இது தவிர செல்பி எடுக்கிறோம் என்ற பெயரில் சிலர் செய்யும் அலப்பறைகள் தாங்க முடிவதில்லை. ரயில் வரும் முன் செல்பி எடுப்பது, உயரமான கட்டிடங்களில் ஏறி செல்பி எடுப்பது இதையெல்லாம் தாண்டி தற்போது சிங்கம், புலி, கரடி போன்ற ஆபத்தான விலங்குகளுடன் செல்பி எடுக்க முயன்று வருகின்றனர்.
இப்படி விளையாட்டாகவும், பிரபலமாவதற்கும் ஒரு சிலர் செய்யும் காரியங்கள் சில நேரங்களில் அவர்களின் உயிரை பறித்து விடுகிறது. செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் செல்பி எடுக்க முயன்ற பலியான மக்களிடம் புகைப்படங்களும், தகவல்களும் வந்த வண்ணம் உள்ளது. இந்த வரிசையில் தற்போது பிரபு என்ற நபர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்று உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. பிரபு பட்டாரா என்பவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்.
டிரைவராக பணிபுரிந்து வரும் இவர் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று காட்டு வழியாக தன்னுடைய குழுவினருடன் திரும்பி கொண்டிருந்தார். அப்போது காயமடைந்த ஒரு கரடி ஒன்று தென்பட்டுள்ளது. இதன் பிறகு கரடியை அருகில் சென்று பார்க்க அங்குள்ளவர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால் பிரபு, அதனுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். உடனிருந்தவர்கள் எச்சரித்தும் கேட்காமல் அருகில் சென்று செல்பி எடுக்க முயற்சித்த அவர் கால்தவறி கீழே விழுந்தார்.
இதனால் கரடியிடம் வசமாக சிக்கியுள்ளார். உடனே ஆத்திரமடைந்த அந்த கரடி அவரை பலமாக தாக்கியுள்ளது. அங்கிருந்தவர்களுக்கு அவரை காப்பாற்ற முயற்சித்தும் கரடி அவரை விடவில்லை. இறுதியில் கரடி பலமாக தாக்கியதில் பிரபு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படி விளையாட்டாக செய்யும் ஒரு சில மக்களின் செயல் அவர்களுக்கே வினையாகி விடுகிறது. இதனால் பாதிப்படைவது நீங்கள் மட்டுமல்ல உங்களுடைய குடும்பமும் தான். செல்பி எடுக்கின்ற பெயரில் இனிமேலாவது முட்டாள் தனமாக செயல்படாதீர்கள். இருக்கும் ஒரு வாழ்க்கையை குடும்பத்துடன் சந்தோசமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்.