ads
கோயம்பத்தூர் மருதமலையில் நடந்த தைப்பூசம்
வேலுசாமி (Author) Published Date : Jan 31, 2018 17:13 ISTஇந்தியா
தைப்பூசம்:
தைப்பூசம் என்பது பரமசிவன் மைந்தனாகிய முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி ஒரே நாளில் முருகனுக்கு நடத்தப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இந்த விழா முழு சந்திரன் பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரத்தில நடத்தப்படுகிறது.
தைப்பூசத்தின் சிறப்புகள்:
1. தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.2. முருகன் தேவர்களின் சேனாதிபதி ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார். தைபூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் கொண்டாடப்பட்டு வருகிறது.3. சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.4. சிதம்பரத்திற்கு நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நேருக்கு நேராகத் தரிசித்ததும் இந்நாளில் தான். இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.5.தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.
கோயம்பத்தூர் மருதமலை தைப்பூசம்:
மருதமலை தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம், சோமையம்பாளையம் ஊராட்சியிலுள்ள ஒரு மலை. இங்குள்ள முருகன் கோயில் முருகனின் ஏழாம் படைவீடாகக் கருதப்படுகிறது. இந்த கோவில் மிகவும் பழமையானது. திருமுருகன் பூண்டி கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் மருதமலை பற்றிய குறிப்புக்கள் உள்ளன. மருதமலை கிட்டத்தட்ட 1200 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலுக்கு அருகிலேயே பாம்பாட்டி சித்தர் குகைக்கோவில் ஒன்றும் உள்ளது. இந்த கோவில் முற்காலத்தில் கொங்கு வேட்டுவ கவுண்டர் இன மன்னர்களின் சொத்தாக விளங்கியது.
முருகக் கடவுளின் பிற கோயில்களைப் போலவே மருதமலை கோயிலும் மேற்குத் தொடர்ச்சியின் விரிவான இந்த மலை உச்சியில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளதால் சாலை வழியாக எளிதில் அடையக்கூடியதாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தினத்தன்று பல்வேறு நகரங்களில் உள்ள பக்தர்கள் மருதமலைக்கு வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர். இந்த வருடம் தைப்பூச தினமான இன்று 150 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அறிய முழு சந்திரகிரகணம் என்பதால் வழக்கத்திற்கும் அதிகமாக பக்தர்கள் திரண்டுள்ளனர்.