ads
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிட வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது
வேலுசாமி (Author) Published Date : May 08, 2018 10:06 ISTஇந்தியா
ஜாக்டோ ஜியோ அமைப்பினர், ஊதிய முரண்பாடுகளை களைதல், பழைய ஓய்வூதிய முறையே அமல்படுத்துதல், 21மாத நிலுவை தொகையை உடனே திருப்பி தரவேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தது. இதன் முன்னெச்சரிக்கையாக தலைமை செயலகம் முன்பு ஆயிரக்கணக்கான காவல் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர இன்று முற்றுகையிட இருந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டு ஜாக்டோ ஜியோ அமைப்பினரை கைது செய்து வருகின்றனர். ஆனாலும் போராட்டம் திட்டமிட்ட படி நடைபெறும் என தெரிவித்த நிலையில் இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிட வந்த ஆயிரக்கணக்கான ஜாக்டோ ஜியோ அமைப்பினரை கோயம்பேடு அருகே கைது செய்துள்ளனர். போராட்டத்தை ஒடுக்கும் விதமாக சேப்பாக்கம் மற்றும் தலைமை செயலகம் முன்பு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் குவிந்துள்ளனர். மேலும் தலைமை செயலகம் செல்லும் சாலையை தடுப்பு பாதுகாப்புகளை வைத்து கண்காணித்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தீவிர வாகன சோதனைக்கு பிறகே வாகனங்களை செல்ல அனுமதித்து வருகின்றனர். ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கைதுக்கு பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் "போராட்டங்கள் களைய வேண்டுமானால், அவர்களின் முக்கிய பிரதிநிதிகளை அழைத்து தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், இதனை செய்யாமல் தமிழக அரசு தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டையை நடத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை கைது செய்துள்ளது.
அமைச்சர் ஜெயக்குமார், அரசு ஊழியர்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுப்பதால் தான் அரசு கடனில் சிக்கியுள்ளது எனவும், இதனால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்றும் தெரிவித்தார். இவரின் கருத்து சற்றும் ஏற்க முடியாத ஒன்று. தற்போது அரசு பணியாளர் ஊதியம் உயர்த்தியது பிரச்சினையில்லை. இதற்கு இணையாக அரசின் வருமானம் வுயர்த்தப்படாதது தான் தற்போது உள்ள அனைத்து சிக்கல்களுக்கும் காரணமாகும்.
இதையெல்லாம் முழு சோற்றில் பூசணிக்காயை மறைப்பது போல் முழுமையாக மறைத்துவிட்டு, அரசின் தோல்வியை அதிகாரிகள் மீது சுமத்தி திசைதிருப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆக, அரசு வீணாக கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.