ads
தமிழர்களின் மெரினா புரட்சி படத்திற்கு தடை விதித்த தணிக்கை குழு
வேலுசாமி (Author) Published Date : Oct 12, 2018 10:32 ISTபொழுதுபோக்கு
கடந்த ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மெரினாவில் ஒன்று திரண்டு வரலாறு காணாத புரட்சி போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தால் தமிழர்களின் ஒற்றுமை பற்றி அனைவருக்கும் புரிந்துள்ளது. இந்த வரலாற்று சம்பவமான ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக கொண்டு 'மெரினா புரட்சி' என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை புதுமுகமான எம்எஸ் ராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.
இவர் முன்னதாக இயக்குனர் பாண்டியராஜனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த அரசியலையும், வன்முறையும் அழுத்தமாக பதிவு செய்ய உள்ளது. இந்த படத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி உருவானது, போராட்டத்தின் முதல் நாளில் இருந்து இறுதி நாள் வரை நடந்த வன்முறைகளை பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கின்றனர். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தினை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர்.
இந்த படத்தினை கண்ட தணிக்கை குழு இந்த படத்தினை வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளது. 'மெரினா புரட்சி'-க்கு விதிக்கப்பட்ட தடை குறித்து இயக்குனர் எம்எஸ் ராஜ் கூறுகையில் "உலகிற்கு தமிழர்களின் ஒற்றுமையையும், ஜல்லிக்கட்டின் அருமையையும் எடுத்துரைத்த 10 கோடி தமிழர்களின் 'மெரினா புரட்சி' போராட்டத்திற்கு தணிக்கை குழு தடை விதித்துள்ளது. இந்த படத்தில் மெரினா புரட்சி பற்றிய உண்மையை கூறியுள்ளோம். இந்த படத்திற்கு மறு சீராய்வில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.