ads
தந்தையின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய ஐஸ்வர்யா பாஸ்கர்
மோகன்ராஜ் (Author) Published Date : Jan 02, 2018 16:12 ISTபொழுதுபோக்கு
முத்துப்பாண்டி சுந்தரம் பாஸ்கர் (எம் எஸ் பாஸ்கர்) இவர், ஒரு தமிழ் நடிகரும் பின்னணிக் குரல் கொடுப்பவரும் ஆவார். இவரது தந்தை முத்துப்பேட்டை சோமுத் தேவர், தாயார் சத்தியபாமா. இவரது தந்தை நிலக்கிழார் ஆவார். இவருக்கு இரண்டு அக்காக்கள், முதலாமவர் ஹேமாமாலினி சென்னையில் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும், இரண்டாமவர் தாரா மும்பையில் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் உள்ளனர். இவருக்கு தம்பி ஒருவர் உள்ளார். இவரது தந்தை முத்துப்பேட்டையைச் சேர்ந்தவராக இருந்தாலும், இவர் பிறந்து வளர்ந்தது நாகப்பட்டினம். நாகப்பட்டினத்திலும் சென்னையிலும் பள்ளிப் படிப்பை முடித்த இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்தார்.
இவர் தொலைக்காட்சித் தொடர்களான நம் குடும்பம், விழுதுகள், கங்கா யமுனா சரஸ்வதி, மாயாவி மாரிசன், சின்னப் பாப்பா பெரியப் பாப்பா, செல்வி போன்ற தொடர்களில் நடித்துள்ளார். இவர் முதன் முதலில் 1987-ஆம் ஆண்டு வெளியான 'திருமதி ஒரு வெகுமதி' என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் 1990 காலங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதனை அடுத்து இவர் மொழி, சிவாஜி, சாது மிரண்டா, சந்தோஷ் சுப்பிரமணியம், தசாவதாரம் உள்ளிட்ட 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் 'மொழி' திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகர் விருது பெற்றார். 'எங்கள் அண்ணா' படத்தில் குடிகாரனாக இவருடைய நடிப்பு இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. முன்னதாக இவர் பற்பசை நிறுவனத்தில் விற்பனையாளாகவும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் முகவராகவும் பணி செய்துள்ளார்.
'காமராஜர்' படத்தில் காமராஜ் பாத்திரத்துக்கும் 'சேது' படத்தில் நாயர் இராமன் பாத்திரத்துக்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.இவருக்கு ஐஸ்வர்யா பாஸ்கர் என்ற ஒரு மகளும், ஆதித்யா பாஸ்கர் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் அவருடைய மகளான ஐஸ்வர்யா பாஸ்கர் புத்தாண்டை முன்னிட்டு அவருக்கு ராயல் என்பீல்டு புல்லட்டை பரிசாக வழங்கியுள்ளார். அதற்கான வீடியோ ஒன்றை பேஸ்புக் பக்கத்தில் ஐஸ்வர்யா பாஸ்கர் வெளியிட்டுள்ளார். அதில் தனது தந்தையின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றி ஆனந்தம் அடைந்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.