ads
எந்திரன் கதை திருடப்பட்ட வழக்கில் இயக்குனர் சங்கருக்கு அபராதம்
வேலுசாமி (Author) Published Date : Sep 04, 2018 10:06 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010இல் வெளியாகி நல்ல வரவேற்பினையும் வசூலையும் குவித்த படம் 'எந்திரன்'. இந்த படத்தின் அடுத்த பாகம் தற்போது '2.0' என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் 2010இல் வெளியான 'எந்திரன்' படத்தின் கதை தொடர்பாக இயக்குனர் சங்கருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010இல் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் இந்த கதை என்னுடையது என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக அவகாசம் கேட்டிருந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் அளித்த புகார் மனுவில் 'நான் 'ஜூஹிபா' என்ற தலைப்பில் கடந்த 1996ஆம் ஆண்டில் உதயம் என்ற பத்திரிகையில் கதை எழுதியிருந்தேன். என்னுடைய இந்த கதையை இயக்குனர் சங்கர் எந்திரன் என்ற தலைப்பில் படமாக உருவாக்கியுள்ளார்.
என்னுடைய அனுமதி பெறாமலே கதையை படமாகியதற்கு இழப்பீடாக 1கோடி வழங்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் இயக்குனர் சங்கர் படப்பிடிப்பு தொடர்பாக வெளியூரில் இருப்பதால் கூடுதல் அவகாசம் கேட்டு இயக்குனர் சங்கர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை மறுத்த நீதிபதி, விசாரணையை 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்து இயக்குனர் சங்கருக்கு 10000ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த அபராத தொகையை புளு கிராஸ் அமைப்பிற்கு அளிக்குமாறும் தெரிவித்துள்ளார்.