ads
தலைவா 2 படத்திற்காக மெர்சலான அரசியல் கதையுடன் காத்திருக்கும் இயக்குனர்
வேலுசாமி (Author) Published Date : May 04, 2018 15:57 ISTபொழுதுபோக்கு
நடிகர் விஜய் நடிப்பில் தற்போது 'தளபதி 62' படம் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு விஜய் அடுத்ததாக யாருடன் இணைய உள்ளார் என்பது குறித்து பல தகவல்கள் வெளியாக திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
தளபதி 62 படத்திற்கு பிறகு விஜயின் அடுத்த படத்தை மீண்டும் இயக்குனர் அட்லீ இயக்க உள்ளதாகவும், இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இது தவிர முன்னதாக பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஜில்லா போன்ற படங்களை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் விஜயின் அடுத்த படத்தையும் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகின. இது உறுதியானால் இந்த படத்தின் மூலம் சூப்பர் குட் பிலிம்ஸ் தனது 100வது படத்தில் அடியெடுத்து வைக்கிறது.
இப்படி விஜயின் அடுத்த படத்திற்கு சினிமா துறையில் ஒரு போட்டியே நிலவி வருகிறது. இந்நிலையில் தற்போது இயக்குனர் ஏஎல் விஜய் விஜயின் அடுத்த படத்திற்காக ஒரு அரசியல் கதையினை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் கடந்த 2013இல் பல தடைகளை கடந்து வெளியான படம் 'தலைவா'. ஒரு தலைவனாக விஜயின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையினை இயக்குனர் ஏஎல் விஜய் அரசியல் கதையாக உருவாக்கியுள்ளார்.
இது குறித்து அவர், தலைவா படத்தின் இரண்டாம் பாகத்திற்காக அரசியல் கதை ரெடியாக உள்ளது. இது அவருக்கும் தெரியும். விஜய் சம்மதம் சொன்னால் 'தலைவா 2' படத்திற்கான பணிகளை ஆரம்பித்து விடுவேன் என்று கூறியுள்ளார். இன்றைய சூழலில் விஜய் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வருகிறது. தொடர்ந்து தலைவன், அரசியல் கருத்து போன்றவை குறித்து தன்னுடைய படங்களில் பேசி வரும் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்திருந்தார். இதற்கு ஒரு நல்ல அரசியல் கதை ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.