ads
பிரபல பேட்மிட்டன் சேம்பியன் வாழ்க்கை சினிமாவாகிறது
ராசு (Author) Published Date : Nov 19, 2017 09:00 ISTபொழுதுபோக்கு
சிறந்த விளையாட்டு வீரராக மட்டுமல்லாமல் ஒரு பயிற்சியாளராகவும் மாறி பல அடுத்த தலைமுறை உருவாக்கி, பேட்மிண்டன் விளையாட்டுக்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுத்த புல்லேலா கோபிசந்தின் வாழ்க்கை தற்போது சினிமாவாகிறது. இவர் 2001-ம் ஆண்டு இங்கிலாந்தின் பெருமைமிக்க ஒபன் பேட்மின்டன் சாம்பியன் விருதை தட்டி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். இதனை அடுத்து 2003-ம் ஆண்டு பேட்மின்டனில் இருந்து ஓய்வு பெற்று, ஐதராபாத்தில் புல்லேலா கோபிசந்த் பேட்மின்டன் அகாடெமியை துவங்கினார். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நேவால், 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, சூப்பர் சீரீஸ் ரெக்கார்ட் செய்த ஸ்ரீகாந்த் கிடம்பி ஆகியோரின் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீரஜா, ஜாலி, எம்.எஸ்.தோனி, தி அன்டோல்டு ஸ்டோரி என பிரபலங்களின் வாழ்க்கையை திரைப்படங்களாக தயாரித்து வெற்றி பெற்று வரும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், பேபி, ஏர்லிஃப்ட் போன்று சிறந்த படங்களை கொடுத்த அபுண்டன்ஷியா எண்டர்டெய்ன்மெண்ட் இணைந்து இந்திய பேட்மிண்டன் அணியின் பயிற்சியாளரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான புல்லேலா கோபிசந்த் அவர்களை வாழ்க்கை பற்றிய படத்தை தயாரிக்கிறார்கள். பயிற்சியாளர் கோபிசந்தின் விளையாட்டு மற்றும் குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து தெலுங்கு மற்றும் இந்தி என இரு மொழிகளில் தயாரித்து வருகின்றனர். இதற்கான திரைக்கதைப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. 2018-ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
இது குறித்து கோபிசந்த்திடம் பேசும்போது "பேட்மிண்டன் தற்போது இந்தியாவில் எல்லா மக்களிடமும் சென்று சேர்ந்திருப்பதும், குறிப்பாக இளைஞர்கள் இந்த விளையாட்டின் மீது ஆர்வம் காட்டுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. என் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவதன் மூலம் பல்வேறு கனவுகளில் இருக்கும் பலரை ஊக்கப்படுத்த முடியும் என்பதில் பெருமை அடைகிறேன். இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நன்றாக நடந்து கொண்டு இருக்கின்றன, ஃபாக்ஸ் ஸ்டார் மற்றும் விக்ரம் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.