ads

ராட்சசனுடன் மோதும் விஜய் தேவரகொண்டாவின் நோட்டா

'ராட்சசன்' வெளியாகவுள்ள அதே தேதியில் விஜய் தேவரகொண்டாவின் 'நோட்டா' படமும் வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான விஷ்ணு விஷால், 'கதாநாயகன்' படத்திற்கு சிலுக்குவார் பட்டி சிங்கம், ராட்சசன், வீர தீர சூரன், ஜகஜால கில்லாடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ராட்சசன்' படத்தில் விஷ்ணு விஷால் முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவருக்கு மனைவியாக அமலா பால் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் இந்த படம் வரும் அக்டொபர் 5ஆம் தேதி வெளியாவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது சஸ்பென்ஸ், திரில்லர் படங்களுக்கு நல்ல வரவேற்புகள் இருந்து வருகிறது. அந்த வகையில் விஷ்ணு விஷாலின் ராட்சசன் படமும் அவருக்கு கைகொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

'ராட்சசன்' வெளியாகவுள்ள அதே தேதியில் விஜய் தேவரகொண்டாவின் 'நோட்டா' படமும் வெளியாகவுள்ளது. தெலுங்கில் 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் பிரபலமான இவர் தமிழ் சினிமாவிலும் 'நோட்டா' படம் மூலம் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தினை அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.

அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா முதலமைச்சராக நடித்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் வெளியீடு தேதி குறித்த அறிவிப்பினை அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் வரும் அக்டொபர் 5ஆம் தேதியில் ராட்சசனும், நோட்டாவும் மோதுவது உறுதியாகியுள்ளது.

ராட்சசனுடன் மோதும் விஜய் தேவரகொண்டாவின் நோட்டா