ads

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி விவகாரம் வைகை புயல் வடிவேலு பதில்

தற்போது வடிவேலுவை வைத்து தயாரிப்பாளர்கள் எந்த  படமும் எடுக்க வேண்டாம் என்று தகவல் பரவி வருகிறது. இதற்கு வடிவேலு விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது வடிவேலுவை வைத்து தயாரிப்பாளர்கள் எந்த படமும் எடுக்க வேண்டாம் என்று தகவல் பரவி வருகிறது. இதற்கு வடிவேலு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் காமெடி கிங் என்றழைக்கப்படும் வைகைப்புயல் வடிவேலு, 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' படம் விவகாரம் தொடர்ந்து தத்தளித்து கொண்டே வருகிறார். கடந்த 2006இல் வெளியான 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்தை சுமார் 9கோடி செலவில் பிரமாண்டமாக செட் அமைத்து படப்பிடிப்பை நடத்த திட்டமிருந்தனர்.

ஆனால் தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு இந்த படத்தில் நடிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டார். இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இது குறித்து வடிவேலு தரப்பில் எந்த பதிலும் வரவில்லை. இதனால் இதற்கெல்லாம் முடிவு கட்ட இயக்குனர்கள் சங்கம், பெப்சி, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் கூடி பொது கூட்டத்தை நடத்தினர். இதில் இயக்குனர் சங்கரும், வடிவேலுவுக்கு பதிலாக அவருடைய மேலாளரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வடிவேலு ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் முடித்து தர வேண்டும் அல்லது படப்பிடிப்பிற்காக செலவழித்த பணத்தை திரும்ப தர வேண்டும் என்ற முடிவை எடுத்தனர். இதன் பிறகு தயாரிப்பாளர் சங்கத்திற்கு வடிவேலு கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில் "இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் முடித்து தருவதாகவும், அதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்பு கொள்ள வேண்டாம் எனவும் எனக்கு உறுதி அளித்திருந்தனர்.

ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் மாதம் வரையிலும் தொடங்காமலே இழுத்து அடித்தனர். ஆனாலும் இதன் பிறகு நடந்த படப்பிடிப்புகளில் நான் நடித்து கொடுத்துள்ளேன். ஆனால் திடீரென என் ஆடை வடிவமைப்பாளரை தயாரிப்பாளர் நீக்கினார். எனக்கு கெட்ட பெயர் வாங்கி தருவதற்காகவே தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஒரு வேளை நான் நடிக்க மறுத்திருந்தால் டிசம்பர் மாதத்திலே புகார் அளித்திருக்கலாம்.

ஆனால் ஒரு வருடம் கழித்தே புகார் அளித்துள்ளனர். இந்த படத்தினால் நான் வேறு படங்களில் நடிக்க்வும் ஒப்பு கொள்ளவில்லை. இதனால் எனக்கு தான் பொருளாதார இழப்பும் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. தற்போது குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த படப்பிடிப்பு தேதியை ஒதுக்க முடியாத சூழலில் உள்ளேன்" என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இது தவிர தற்போது வடிவேலு இம்சை அரசன் பிரச்சனையை முடிக்கும் வரை வேறு எந்த தயாரிப்பாளரும் அவரை வைத்து படம் பண்ண வேண்டாம் எனவும் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் குறித்து கூறிய வடிவேலு "இது உண்மையாக இருந்தால் எனக்கு நோட்டீஸ் வந்திருக்கும். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை. எனக்கு களங்கம் விளைவிக்க சிலர் கிளப்பி விட்ட வதந்திகள் தான்" என்று அதனை மறுத்துள்ளார்.

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி விவகாரம் வைகை புயல் வடிவேலு பதில்