ads
சீதக்காதி பெயருக்கு கலங்கம் ஏற்படாமல் காட்சிகள் அமைய வேண்டும்
வேலுசாமி (Author) Published Date : Jan 29, 2018 12:01 ISTபொழுதுபோக்கு
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'சீதக்காதி'. இந்த படம் வள்ளல் 'சீதக்காதியின்' வாழ்க்கை வரலாற்று படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வள்ளல் சீதக்காதியின் பெயருக்கு கலங்கம் ஏற்படாமல் காட்சிகள் அமைய வேண்டும் என சேதுபதி-சீதக்காதி சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான அஜ்மல் தீன் கூறியுள்ளார். இது குறித்து அஜ்மல் தீன் கூறியதாவது "வள்ளல் சீதக்காதி, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். வணிகர் சேகு அப்துல் காதர் என்பவருடைய பெயர்தான் சீதக்காதி என்று மாறியுள்ளது.
டச்சு மற்றும் ஆங்கிலேயர்கள், சீதக்காதி இந்தியா, மலேசியா, சீனா, அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல் மூலம் வணிகம் செய்ததற்கான ஆவணங்களை பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை ஆண்ட கிழவன் சேதுபதி என்ற மன்னர், சீதக்காதியை தனது ஆலோசகராகவும், அவருக்கு விஜயரகுநாத என்ற படத்தையும், பாக்ஜலசந்தி, மன்னர் வளைகுடா கடற்கரையில் முத்து குளிப்பதற்கான அதிகாரத்தையும் வழங்கி சிறப்பித்துள்ளார். மேலும் சீதக்காதி, சீறாப்புராணத்தை உமறுப்புலவர் இயற்ற நிதி அளித்தவர்.
சைவ புலவர் பொற்கழந்தை படிக்காசு தம்பிரான் என்ற புலவர், சீதக்காதியை, எளியவர்களுக்கு வாரி வாரி வழங்கும் சிவந்த கைகளுக்கு சொந்தக்காரர் என்று புகழ்ந்து பாடியுள்ளார். தமிழர்கள் அனைவருக்கும் சீதக்காதி என்றால் நினைவிற்கு வருவது வள்ளல் சீதக்காதி தான். இந்த படம் மேடை கலைஞனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டாலும் வள்ளலான சீதக்காதியின் பெயருக்கு கலங்கம் ஏற்படாமல் படத்தை அமைக்க வேண்டும்." என்று அஜ்மல் தீன் தெரிவித்துள்ளார்.
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்திற்கு பிறகு இயக்குனர் பாலாஜி தரணீதரன், ஒரு பக்க கதை, சீதக்காதி போன்ற படங்களை இயக்கி வருகிறார். இதில் 'சீதக்காதி' படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம், உமேஷ். ஜெயராம், அருண் வைத்யநாதன் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தமிழ் மற்றும் மலையாள இசையமைப்பாளரான கோவிந்த் மேனன் இசையமைத்து வருகிறார். இவர் விஜய் சேதுபதியின் '96' படத்திற்கும், இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கும் 'ஒரு பக்க கதை' படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.