ads
நெல்லையில் துவங்கிய விக்ரமின் சாமி ஸ்கொயர் படப்பிடிப்பு
வேலுசாமி (Author) Published Date : Feb 23, 2018 10:53 ISTபொழுதுபோக்கு
'சிங்கம் 3' படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'சாமி 2'. இந்த படத்தின் மூலம் 15 வருடங்களுக்கு பிறகு நடிகர் விக்ரம் காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார். 2003-ஆம் ஆண்டில் வெளிவந்த 'சாமி' படத்தின் தொடர் கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் த்ரிஷா நடிப்பதாக இருந்தது.
எதிர்பாராத காரணங்களால் அவர் விலக இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் விக்ரமின் மனைவியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை சந்திப்பில் நடத்தப்பட்டது. ஆனால் விக்ரமின் தந்தையான நடிகர் ஆல்பர்ட் விக்டர் இறந்துவிட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
இதனை அடுத்து காரைக்குடியில் படப்பிடிப்பை சமீபத்தில் படக்குழு தொடங்கியது. விறு விறுப்பாக நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் 'பெருமாள் பிச்சை' மகன்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டது. இதன் பிறகு தற்போது நெல்லை சந்திப்பில் மீண்டும் படபிடிப்பு தொடங்கியுள்ளது. நெல்லையில் டவுன் ஆர்ச் அருகே உள்ள திரையரங்கில் இந்த படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் 'விழிமூடா இரவு' என்ற படத்தின் படப்பிடிப்பும் நிகழ்ந்துள்ளது. ஒரே சமயத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடந்ததால் பொது மக்களை கூட்டம் திரையரங்கு முன்பு அலைமோதியது. இந்த திரையரங்கிற்கு 'PP தியேட்டர்' என பெயர் மாற்றி அங்கு மறைந்த சிவாஜி கணேசனின் 'கர்ணன்' படத்தை திரையிடுவது போன்று பேனர்கள் வைக்கப்பட்டது.
இந்த படத்தை காண டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வாங்குவது போன்ற துணை நடிகர்கள் காட்சி எடுக்கப்பட்டது. இந்த படத்தில் பாபி சிம்ஹா பெருமாள் பிச்சை மகனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நெல்லையில் சில நாட்களுக்கு நடக்கவுள்ளது. இந்த படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியிட உள்ளனர்.