Policies

About Us விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் Disclaimer Policy Privacy Policy

Contact

Contact Us Twitter Facebook Google +
Copyright Stage3 News
2018. All Rights Reserved

எம்ஜிஆர் பல்கலைக்கழக ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

புதிய நீதி கட்சி தலைவரான ஏசி சண்முகம், சென்னை வேலப்பன் சாவடியில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக கல்லூரிகளின் 30-ஆம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். இதன் பிறகு எம்ஜிஆரின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலையை  பல்கலைக்கழக வளாகத்தில் ரஜினிகாந்த் திறந்து வைத்தார்.

பின்னர் திரண்டிருந்த மாணவர்களின் மத்தியில் பேசிய ரஜினிகாந்த் "முதலில் இது ஒரு பல்கலைக்கழக விழா என்று தான் நினைத்தேன். ஆனால் இது கட்சி மாநாடு போல உள்ளது. இதை அரசியல் மேடை ஆக்கக்கூடாது. அரசியல் பற்றி பேசக்கூடாது என்று அழுத்தமாக இருந்தேன். ஆனால் முடியவில்லை, சில வார்த்தைகள் மட்டும் பேசுகிறேன். 

மறைந்த எம்ஜிஆரின் ஆட்சி தான், தற்போது அதிமுக ஆட்சி என்று நடக்கிறது. அவருடைய ஆட்சியில் ஊரெல்லாம் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. சினிமா தான் அவருக்கு தாய் வீடு. அதுமட்டுமல்ல, இதயதெய்வமான ஜெயலலிதாவும் சினிமாத்துறையில் இருந்து வந்தவர்.


எம்ஜிஆரை போல சினிமா உலகில் இருந்து இன்னொருவர் அரசியலுக்கு வரக்கூடாது, பேண்ட் சர்ட் போட்டு கேமரா முன்பு நாயகிகளுடன் டூயட் பாட நாங்கள் வரவில்லை. நீங்கள் கரைவேட்டி கட்டி ஏன் எங்கள் வேலைக்கு வருகிறீர்கள்?’ என்கிறார்கள்.

அய்யா... நான் மற்றவர்களை பற்றி பேசவில்லை. என்னை பற்றி மட்டும் சொல்கிறேன். என் வேலையை நான் சரியாக செய்துகொண்டிருக்கிறேன், நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்யவில்லையே. 1996-ல் இருந்து அரசியல் எனும் நீர் என் மீதும் பட்டுவிட்டது. கருணாநிதி, மூப்பனார், சோ ஆகியோருடன் பழகி நானும் கொஞ்சம் அரசியல் கற்றுள்ளேன்.

எங்கே தப்பு நடக்கிறது, எப்படி தடுப்பது என்று எனக்கு தெரியும். மக்களுக்கு செய்யவேண்டிய கடமை இருக்கிறது. ஆகவே தான் அரசியலுக்கு வருகிறேன். நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னால், ஏன் கேலி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. 


அனைவரும் எம்ஜிஆராக முடியாது. சினிமாவில் இருந்து அவரை போல யாரும் அரசியலில் ஜொலிக்க முடியாது என்கிறார்கள். நிச்சயமாக யாரும் எம்ஜிஆராக முடியாது. பொன்மனச்செம்மல், மக்கள் திலகம், ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவரை போல யாரும் வரமுடியாது. ஆனால் அவர் தந்த நல்லாட்சி, ஏழைகளுக்கான ஆட்சி, சாமானிய மக்களுக்கான ஆட்சி என்னாலும் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

மக்களின் ஆசிர்வாதம், இளைஞர்கள் உறுதுணையுடன், நல்ல தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நல்ல சிந்தனையாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் திறமைசாலிகளை வைத்துக்கொண்டு அந்த மாதிரி ஆட்சியை என்னால் கொடுக்கமுடியும். ஆன்மிக அரசியல் என்றால் என்று கேட்கிறார்கள். முன்பே சொன்னது தான். உண்மையான, நேர்மையான, வெளிப்படையான, சாதி மத சார்பற்ற அறவழியில் நடப்பது தான் ஆன்மிக அரசியல் தூய்மை தான் ஆன்மிகம். எல்லா ஜீவன்களும் ஒன்றுதான்.

இறை நம்பிக்கை இருப்பது தான் ஆன்மிக அரசியல். கொள்கை பற்றி கேட்டால் தலை சுற்றுகிறது, என்று நான் சொன்ன சின்ன விஷயத்தை பற்றி ஒரு வாக்குவாதம்  நடத்துகிறார்கள். 31-ஆம் தேதி நான் அரசியலுக்கு வருகிறேனா, இல்லையா என்பதை தெரிவிப்பேன் என்றேன். ஆனால் 29-ஆம் தேதி அன்றே உங்கள் கொள்கை என்ன என்று கேட்கிறார்கள். 

மக்கள் முன்னால் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாக பேசவேண்டும். மேடையில் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே மக்களின் அறிவு திடீரென்று எழும். மாசக்கணக்கில் ரூம் போட்டு, கதை குறித்து விவாதம் நடத்தி, சினிமா எடுக்கும் கஷ்டம் சினிமாக்காரனான எனக்கு தெரியும். ஆனால் படத்தை பார்த்துவிட்டு அது சரியில்லை என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவார்கள்.

அதே படத்தை தனியாக போட்டுக்காட்டுங்கள். எதுவுமே சொல்லமுடியாது. மக்களிடம் பேசும்போது ஜாக்கிரதையாக பேசவேண்டும். சரி இப்போ ஏன் அரசியலுக்கு வருகிறீர்கள். ஜெயலலிதா இருக்கும்போது ஏன் வரவில்லை?, பயமா? என்று கேட்டார்கள். 1996-ஆம் ஆண்டு இருந்த நிலைமை எல்லோருக்கும் தெரியும்.

அப்போதே அவருக்கு எதிராக குரல் கொடுத்த எனக்கு, ஏன் வரப்போகிறது பயம், அரசியல் வெற்றிடம் இருப்பது உண்மை தான். நல்ல தலைவனுக்கு, நல்ல தலைமைக்கு எப்பவுமே வெற்றிடம் இருக்கிறது. சக்தி திறமை வாய்ந்த இரண்டு தலைவர்கள் இருந்தார்கள். ஜெயலலிதாவின் ஆளுமை பற்றி யாருமே கேள்விகேட்க முடியாது.

எந்த தலைவரும் ஒரு கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் அப்படி வைக்கமுடியாது. அப்படி கட்டுப்பாட்டுடன் கட்சியை வைத்திருந்த ஒரு தலைவர். அடுத்து கருணாநிதி என் அருமை நண்பர், 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லையென்றாலும் தன் கட்சியை அப்படி அக்கறையுடன் காப்பாற்றினார். எத்தனை தலைவர்களை உருவாக்கிய கட்சி அது.

அவர் இப்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். தற்போது தமிழகத்துக்கு இப்போது ஒரு தலைமை தேவை. அந்த இடத்தை நிரப்ப நான் வருகிறேன். நம்ம பக்கம் அந்த ஆண்டவனே இருக்கிறான் நான் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ரசிகன். நான் சென்னைக்கு வந்த பிறகு சினிமாவுக்கு வந்த பிறகு புரட்சி தலைவர் எம்ஜிஆர் பற்றி கேள்விப்பட்டு, அவருடைய வாழ்க்கை வரலாற்றை எல்லாம் பார்த்து, அவருடைய சாதனைகளை எல்லாம் பார்த்து வாழ்க்கையிலே நான் அவருடைய மிகப்பெரிய ரசிகனாகி விட்டேன்.

அவருடைய பெரிய வெறியனாக மாறிட்டேன். எம்ஜிஆர். 1950 ஆண்டுகளில் ஆக்‌ஷன் ஹீரோ இருந்தார். அலிபாபா, மலைக்கள்ளன் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் போது சிவாஜி சார் என்ட்ரி ஆகிறார். ‘பராசக்தி’ படத்தின் ஒரே காட்சியில் நடிப்புனா என்ன என்பதையே மாற்றிவிட்டார். வசன உச்சரிப்புன்னா என்ன என்பதையே மாற்றிட்டார். இதுதான் நடிப்பு. வசன உச்சரிப்பு, என்று சிவாஜி தனி புரட்சியையே உருவாக்கினார்.

பின்னர் மிகப்பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எல்லாம் சிவாஜி சார் பின்னால் சென்றார்கள். எம்ஜிஆரின் கதை முடிந்தது என்றார்கள். அப்போது எம்ஜிஆர் சொந்தப்படம் தயாரித்தார். யாருக்குமே தெரியாது அந்த படத்தை அவரே இயக்கினார். இவருக்கு தேவையா இது, கெட்டகாலம் வந்தா இப்படி தான், என்று சொன்னார்கள். அந்த படம் தான் ‘நாடோடி மன்னன்’. அது புதிய இதிகாசம் படைத்தது. டைரக்டர்கள் எல்லாம் நடுங்கி விட்டார்கள். நான் யார் என்று நிரூபித்தார்.

அப்போது எம்ஜிஆர் செட்டுக்குள் வந்தாலே இயக்குனர்களுக்கு வியர்க்கும். அந்த மாதிரி சாதனை படைத்து காட்டியவர். அவருடைய காலத்தில் சினிமாவில் யாருடன் போட்டி என்றால் அது சிவாஜி கணேசனுடன் தான். அரசியலில் போட்டி கருணாநிதி. அவரை போன்ற ஒரு எழுத்தாளர், பேச்சாளர், அரசியல் ஞானி இந்தியாவிலேயே கிடையாது. 13 ஆண்டுகள் எம்ஜிஆருக்கு மக்கள் மீதுள்ள அக்கறையால் மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்தது.

ஒவ்வொரு குடிசையிலும் ஒரு விளக்கு இலவசமாக கொடுத்தார். ஒவ்வொரு கிராமத்துக்கும் பஸ், சாலை வசதி கொடுத்தார். ஒரு வகுப்பில் 100 குழந்தைகள் இருந்தார்கள் என்றால், அதில் 30 குழந்தைகளுக்கு மட்டும் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தின் கிழ் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் எம்ஜிஆர் வந்த பிறகு எல்லோருக்கும் சாப்பாட்டு போட்டார்.

ஏழை மக்கள் சைக்கிளில் இரண்டு பேர் சென்றால், போலீசார் பிடித்து விடுவார்கள். இரண்டு பேர் செல்லலாம் என்று அந்த சட்டத்தை மாற்றினார். ரேஷன் கடைகள் ஆரம்பித்தார். இதனால் தான் 13 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் இருந்தார். அமெரிக்காவில் இருந்த போது அவர் உயிரோடு இருக்கிறாரா என்று கேட்டார்கள். அவரிடம் பேச முடியாது செயலாற்ற முடியாது என்று சொன்னாலும், அந்த மகான் உயிரோடு இருந்தால் மட்டும் போது அவருக்கு தான் ஓட்டு போடுவோம் என்று சொல்லி ஓட்டை குத்தினார்கள்.

எம்ஜிஆர் அவர்கள் மறைந்த பிறகும், அவருடைய சமாதியில் உள்ள கடிகாரம் ஓடுகிறதா என்று இன்னும் பொதுமக்கள் கேட்கின்றனர். அவர் ஒரு தெய்வப்பிறவி. அந்த ஆண்டவருடைய சக்தி, அவரை இயக்கி கொண்டிருக்கிறது." என்று அவர் தெரிவித்துள்ளார். 

எம்ஜிஆர் பல்கலைக்கழக ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

செய்தியாளர் பற்றி
செய்தியாளர்
சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.
1B, Commercial Site, TNHB,
HUDCO Colony, Peelamedu,
Coimbatore, Tamil Nadu
India - 641004.
9790403333 support@stage3.in