ads
என்னடா சொல்றீங்க..மகாபாரத காலத்துல இன்டர்நெட் சேட்டிலைட்டா?..
வேலுசாமி (Author) Published Date : Apr 18, 2018 15:14 ISTPolitics News
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த பல வருடங்களாக திரிபுராவை ஆட்சி செய்து வந்தது. ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வரலாற்றில் முதன் முறையாக பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. இதன் பிறகு திரிபுரா மாநிலத்தின் முதல்வராக பிப்லாப் தேப் பதவியேற்றார். இவர் திரிபுரா மாநிலத்தின் 10வது முதல்வராவார். இந்நிலையில் சமீபத்தில் அகர்தலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் டேப் கலந்து கொண்டுள்ளார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர் "டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி, அனைவருக்கும் இணையதள சேவையினை சிறப்பாக அளித்து வருகிறார். இது போன்ற திட்டங்களால் இந்தியா நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. கண் பார்வை இழந்த திருதிராஷ்டிரன் மகாபாரத போரின் போது, போர்க்களத்தில் இல்லாதபோதும் அங்கிருக்கும் தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொண்டார்.
இது அப்போதிருந்த இணையதளம் மற்றும் செயற்கை கொள் தொழில்நுட்பம் மூலமே சாத்தியமானது. இதன் மூலம் மகாபாரத காலத்திலே இணையதள பயன்பாடு இருந்தது தெரிய வருகிறது. தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்திற்கு ஐக்கிய, அமெரிக்க உரிமை கூறலாம். ஆனால் இவை அனைத்தும் இந்தியாவின் தொழில்நுட்பம். இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இணையதள, செயற்கைகோள் பயன்பாடு இருந்தது. மைக்ரோசாப்ட் அமெரிக்காவை சார்ந்த நிறுவனமாக இருக்கலாம் ஆனால் அதில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
உலகில் இந்தியா தான் நவீன தொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழ்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார். இணையதளம், செயற்கை கொள் போன்றவை மகாபாரத காலத்திலே இருந்தாக கூறிய திரிபுரா முதல்வரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. இவரின் பேச்சுக்கு ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.