ads
காமன்வெல்த் போட்டியில் சர்ச்சையில் சிக்கிய இந்திய வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு
வேலுசாமி (Author) Published Date : Apr 13, 2018 12:55 ISTSports News
ஆஸ்திரேலியாவில் 71 நாடுகள் பங்கேற்கும் காமன் வெல்த் போட்டிகள் கோல்ட் கோஸ்ட் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா வீரர்கள் பல துறைகளை தங்க பதக்கங்களை குவித்து வருகின்றனர். தங்கம் வென்ற வீரர்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் முதல் பொது மக்கள் வரை அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த காமன்வெல்த் போட்டியில் வீரர்கள் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்காதவாறு, காமன்வெல்த் அமைப்பு வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதற்காக எந்த ஊக்கமருந்து ஊசியை வீரர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்திய தடகள வீரர்களான இர்பான் மற்றும் ராகேஷ் ஆகியோர் தங்கியிருந்த அறையில் ஊசி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தற்போது இரண்டு தடகள வீரர்களும் உடனடியாக நாடு திரும்பும்படி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து காமன்வெல்த் அமைப்பின் தலைவர் லுயிஸ் மார்ட்டின் வெளியிட்ட அறிக்கையில் "இந்தியாவின் தடகள வீரர்கள் ராகேஷ் மற்றும் இர்பான் ஆகியோர் தங்கியிருந்த அறையில் ஊசி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காமன்வெல்த் போட்டியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதால் உடனடியாக நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளார். இதற்கு இந்திய அணிக்குழுவின் தலைவர் விக்ரம், "இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதை ஏற்க முடியாது. இவர்கள் விதிகளை மீறியதாக எப்படி உறுதிப்படுத்தினார். ராகேஷின் பையில் தான் ஊசி கண்டறியப்பட்டது. அதற்காக இர்பானை ஏன் வெளியேற்ற வேண்டும், இதனை எதிர்த்து காமன்வெல்த் அமைப்பில் அப்பீல் செய்ய உள்ளோம்." என்று அவர் தெரிவித்துள்ளார்.