ads
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் UIDAI வதந்தி - இதோ முற்றுப்புள்ளி
ராசு (Author) Published Date : Aug 05, 2018 13:04 ISTTechnology News
கடந்த சில தினங்களாக ஆதார் உதவி எண் (Aadhaar Helpline Number) குறித்து வதந்திகள் பரவி வருகிறது. UIDAI (Unique Identification Authority of India) ஹேக்கிங் செய்து நமது ஆண்டிராய்டு மொபைலில் நமக்கே தெரியாமல் '1800-300-1947' என்ற எண்ணை உள்நுழைத்து விட்டதாக வதந்திகள் பரவி வருகிறது. இது குறித்து UIDAI தனது டுவிட்டரில் "சமூக வலைத்தளங்களில் ஆதாரின் காலாவதியான தவறான எண்ணான 1800-300-1947 என்ற எண் ஆண்டிராய்டு மொபைல் காண்டாக்ட் லிஸ்டில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஆதார் எந்த தொலைத்தொடர்பு அல்லது மொபைல் நிறுவனத்திடமும் இந்த எண்ணை இணைக்க அனுமதி அளிக்கவில்லை. இது தவிர இந்த எண்ணானது காலாவதியான தவறான எண்ணாகும். தேவையற்ற வதந்திகளை பரப்ப சிலர் நேரத்தை வீணாக்கி வருகின்றனர். எங்களுடைய அதிகாரபூர்வ எண் '1947'. இந்த எண் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இதனால் நாங்கள் எந்த மொபைல் நிறுவனத்திடமோ, தொலைத்தொடர்பு நிறுவனத்திடமோ '1800-300-1947' இந்த எண்ணை ஆண்டிராய்டு மொபைலில் இணைக்குமாறு வலியுறுத்தவில்லை என்பதை மீண்டும் தெரிவித்து கொள்கிறோம்." என்று UIDAI தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து கூகுள் அதிகாரி கூறுகையில் "கடந்த 2014இல் ஆதார் உதவி எண் (UIDAI Helpline Number) ஆண்டிராய்டு செட்டப்பில் தவறுதலாக இணைக்கப்பட்டது. இதனால் தற்போது காண்டாக்ட் வரிசையில் (Contact List) ஒரு சில மொபைல்களில் மட்டும் காண்பிக்கிறது. ஏற்பட்ட தவறுக்காக நாங்கள் வருந்துகிறோம். இதனால் வாடிக்கையாளர்கள் எந்த கவலையும் அடைய வேண்டாம். இதன் மூலம் ஹேக்கிங் மற்றும் 'unauthorised access' போன்ற எந்த தீங்கும் நேராது.
இந்த எண்ணை வாடிக்கையாளர்கள் டெலிட் செய்து கொள்ளலாம். நேர்ந்த இந்த பிழையை இரண்டு வாரத்திற்குள் சரி செய்து விடுவோம்." என்று கூகுள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் UIDAI காலாவதியான '1800-300-1947' இந்த எண் தங்களுடையது அல்ல எங்களுடைய அதிகாரபூர்வ எண் '1947' என்று தெரிவித்துள்ளது. ஆனால் UIDAI வின் அதிகாரப்பூர்வ '1947' என்ற எண்ணே தங்களது ஆண்டிராய்டு மொபைலில் இணைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.
தேவையை விட்டுவிட்டு தேவையற்றதற்காக வாதாடுவது மக்களுக்கு வாடிக்கையாகி விட்டது. ஏற்கனவே ஆண்டிராய்டு மொபைலில் வாட்சப், ட்வீட்டர், ட்ரூ காலர் போன்ற ஏகப்பட்ட செயலிகள் மூலம் தமக்கே தெரியாமல் நம்முடைய தனி நபர் தகவல்களாலான ஆதார், முகவரி, வங்கி கணக்கு போன்றவை திருடப்பட்டு விட்டது, திருடப்பட்டும் வருகிறது. இது தவிர நமது வாட்சப்பில் நமக்கே தெரியாமல் நாம் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜையும் எவனோ ஒருவன் பார்த்து கொண்டு தான் இருக்கிறான்.
இதையெல்லாம் விட்டு விட்டு ஆதாரின் உதவி எண் எங்களுடைய மொபைலில் என் வந்தது என்ற கேள்வி வேடிக்கையாக உள்ளது. மேலும் ஒரு சிலர் பொழுதுபோக்குக்காக பரப்பும் தவறான வதந்திகளை பார்த்து உண்மையா என்று ஆராயாமல் அதனை உடனுக்குடன் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்து ஒரே நாளில் தவறானதை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இது போன்ற பழக்கங்களால் தவறான செய்தியினால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. கவனமுடன் இருப்பது அவசியம் தான், ஆனால் உண்மையா, தேவையானதா என்று ஆராயாமல் தேவையற்றதை பகிர்வது முட்டாள் தனம் என்றே சொல்லலாம்.