ads
குவின்ஸ்லாந்தில் ஒரு விசுவாசமான செல்ல பிராணியின் மனதை நெகிழ வைக்கும் செயல்
வேலுசாமி (Author) Published Date : Apr 24, 2018 11:43 ISTWorld News
உலகில் மொத்தமாக 7.77 மில்லியன் உயிரினங்கள் உள்ளது. ஆனால் இதில் சில விலங்கினங்கள் மட்டும் மனிதர்களின் வளர்ப்பு உயிரினங்களாக வளர்க்கப்படுகிறது. வளர்ப்பு உயிரினங்களில் மிக சிறந்த உயிரினமாக நாய் கருதப்படுகிறது. இதற்கு காரணம் அவற்றின் மோப்ப சக்தியும், மனிதர்களுக்கு உதவக்கூடிய வகையில் அதன் செயல்பாடுகளும் தான். நாய்களுக்கு தமிழில் ஞாளி, எகினம், கடிநாய், அக்கன், அசுழம், குக்கர், கூரன், கொக்கு, செந்நாய், ஞமலி, ஞெள்ளை, முலவை, முவ்வை, மடிநாய், குடத்தி நாய், குக்குரன், கடுவாய், வடி, வங்கு, தோல்நாய், நயக்கன், தோனாய் (தோல்நாய்), பாகி, பாசி, முடுவல் என அதன் வகைகளை பொறுத்து பல பெயர்கள் உள்ளது.
முந்தைய காலங்களில் நாய்களை அதன் மோப்ப சக்தியை வைத்து வேட்டையாடுவதற்காக அக்கால மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் தற்போது நாய் சிறிது சிறிதாக மனிதர்களுடன் நெருக்கமாக பழகி மனித குடும்பங்களுடன் சேர்ந்த வாழ ஆரம்பித்து விட்டது. ஒரு குடும்பத்திற்கு சிறந்த பாதுகாவலனாகவும், விசுவாசமாகவும் நாய் கருதப்படுகிறது. மனிதர் எந்த அளவிற்கு வளர்ப்பு நாய்களை விரும்புகிறாரோ அதை விட பல மடங்கு நாய்கள் நம்மை விரும்பி பழகுகிறது. நாய்களின் விசுவாசம் எல்லையற்றது.
இதற்கு சான்றாக தற்போது ஆஸ்திரேலியாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. குவின்ஸ்லாந்து மாகாணத்தில் மூன்று வயதேயான குழந்தை அரோரா, வீட்டில் அங்கும் இங்கும் விளையாடி கொண்டிருந்தது. அந்த வீட்டில் மேக்ஸ் என்ற செல்ல பிராணி நாயும் வளர்ந்து வருகிறது.திடீரெனெ எதிர்பாராத விதமாக குழந்தை அரோரா விளையாடி கொண்டே வீட்டை விட்டு 2 கிமீ தொலைவில் காட்டு பகுதியில் உள்ள புதர் பகுதிக்கு தன்னுடைய செல்ல பிராணியுடன் சென்று விட்டது.
சிறிது நேரம் கழித்து குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர்கள், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அங்குள்ள மலைப்பகுதியில் அலைந்து தேடியுள்ளனர். இந்த தேடுதலில் 100க்கும் மேற்பட்ட அவசர கால பணியாளர்கள் இணைந்து தேடியுள்ளனர். சுமார் 16 மணிநேரத்திற்கு பிறகு கடந்த சனிக்கிழமை காலையில் குழந்தையை கண்டுபிடித்தனர். இந்த 16 மணிநேரமும் செல்ல பிராணி மேக்ஸ் பாறைகளுக்கு நடுவே குழந்தையை அணைத்து கொண்டு 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாத்து வந்துள்ளது.
இது குறித்து அந்த குழந்தையின் பாட்டி லேசா மேரி (Leisa Marie Bennet) என்பவர் கூறுகையில், "வீட்டில் இருந்து 2கிமீ தொலைவில் குழந்தை அரோராவின் குரல் கேட்டது. சத்தத்தை கேட்டு மலையின் உச்சியில் சென்று பார்த்த போது செல்ல பிராணி மேக்ஸ் என்னிடம் வந்து நேரடியாக குழந்தை இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றது. குழந்தையை மீட்ட போது குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பயத்துடன் இருந்து குழந்தை அரோராவுக்கு மேக்ஸ் தான் உறுதுணையாக நின்று இரவு முழுவதும் பாதுகாத்துள்ளான்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
செல்ல பிராணி மேக்சின் இந்த செயலுக்கு அப்பகுதி போலீசார் பாராட்டி வருகின்றனர். சிறந்த பாதுகாவலனாக செயல்பட்ட மேக்ஸுக்கு காவல் அதிகாரிகள் சம்பளமில்லாத கவுரவ போலீஸ் நாய் (Honorary Police Dog) என்று பட்டம் சூட்டியுள்ளனர். வளர்ப்பு பிராணி மேக்சின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.