ads
உலக புகையிலை ஒழிப்பு நாளான இன்று நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை
வேலுசாமி (Author) Published Date : May 31, 2018 10:34 ISTWorld News
இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம். இன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் உலகம் முழுவதும் மக்களிடையே புகையிலை குறித்த அபாயத்தையும், புகையிலையால் ஏற்படும் தீங்குகளையும் பற்றி பல சமூகநல அமைப்புகள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் 2018இல் கொண்டாடப்படும் இந்த புகையிலை ஒழிப்பு தினத்தில் புகையிலையால் இதயத்திற்கு வரும் தீங்குகளை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
1987ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்பால் அனுசரிக்கப்பட்ட இந்த தினம் தற்போது 21ஆண்டுகளை நிறைவு செய்கிறது. புகையிலையால் ஏற்படும் தீங்குகள் பற்றி மக்கள் அனைவருக்குமே தெரியும். ஆனாலும் துன்பம் மற்றும் சந்தோசத்தின் போது புகைபிடிக்க வேண்டும் என்ற நாகரிகம் இன்றைய இளைஞர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடமும் உள்ளது. இந்த புகையிலையால் ஓராண்டுக்கு 7 மில்லியன் மக்கள் இருதயம் மற்றும் நுரையீரலில் ஏற்படும் நோய்களால் இறக்கின்றனர்.
இது தவிர புகைபிடிப்பவர்கள் மட்டுமல்லாமல் புகைபிடிக்கும் போது வெளிவரும் புகையை சுவாசிக்கும் மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஆண்டுதோறும் புகைப்பழக்கம் இல்லாத 6 லட்சம் மக்களும் இறந்து வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த புகைபிடிக்கும் பழக்கத்திற்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். உலகத்தில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு புகைப்பழக்கம் இரண்டாவது காரணமாக உள்ளது. இன்றைய சூழலில் புகைபிடிக்கும் பழக்கம் பள்ளி குழந்தைகள் முதல் வயதான முதியவர்கள் வரை அனைவரிடத்திலும் காணப்படுகிறது.
புகைபிடிப்பவர்கள், தங்களுக்கு என்ன நேர்ந்தாலும் கவலை இல்லை, சுற்றியுள்ளவர்கள் எப்படி போனால் என்ன, குடும்பம் எப்படி போனால் நமக்கு என்ன என்ற நோக்கில் திரிந்து கொண்டிருக்கின்றனர். இது போன்ற தீய பழக்கங்கள் அவர்களை தீய வழிக்கு அழைத்து சென்று அவர்களின் வாழ்க்கையை சிதைத்து விடுகிறது. புகைப்பிடிப்பதால் முதலில் சுவாச பிரச்சனை, இருதய குழாய்கள் போன்றவற்றை அழித்து இறுதியாக கார்டியோவாஸ்குலார் நோய் (cardiovascular diseases (CVD)) இதய நோய்களை ஏற்படுத்தி உயிரை பறித்து விடுகிறது. முன்னதாக இளமை பருவத்தில் இருந்து வந்த இந்த தீய பழக்கம் இப்போது பல்லை பருவம் முதலே ஆரம்பித்து விடுகிறது.
புகைப்பிடிப்பதால் 30 வயதுக்குள்ளாக பாதிப்பு அதிகம் இருப்பதில்லை. 30 வயதிற்கு மேல் இருதய நோய்கள் உள்ளிட்ட ஏராளாமான நோய்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையை கதி என்ற நிலைமைக்கு ஆளாகின்றனர். ஆனால் இது அனைவருக்கும் தெரிந்த அடிப்படையான ஒரு விஷயமாகும். ஆனாலும் இதனை அறிந்தே இத்தகைய தீய பழக்கங்களை கையாளும் புண்ணியவான்கள், சுற்றுப்புறத்தையும் அழித்து, குடும்பத்தையும் சிதைத்து இறுதியில் அவர்களும் மாய்ந்து போகின்றனர்.
30 வயதிற்குள் அனைத்து சந்தோஷத்தையும் முடித்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் திரியும் அவர்களை திருத்த ஏராளமான சமூக நல அமைப்புகளும், பொது மக்களும் ஒவ்வொரு ஆண்டும் போராடி வருகின்றனர். ஆனாலும் ஒவ்வொரு ஆண்டிலும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இவர்களை குறை சொல்லி என்ன நடக்க போகிறது?..சட்டத்திற்கு புறம்பானது என்று அறிந்தும் அதனை விற்கும் கடைகளும், தெரிந்தும் அதனை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகளும், அரசாங்கமும் இருக்கும் வரை புகைப்பழக்கத்தை ஒழிக்க முடியாது.