ads
ப்ளூவேலுக்கு பிறகு வாட்சப்பில் பரவி வரும் மோமோ சேலஞ்
வேலுசாமி (Author) Published Date : Aug 10, 2018 11:43 ISTWorld News
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உயிரை பறிக்க கூடிய கொடிய விளையாட்டான 'ப்ளூவேல்' உலகையே அச்சுறுத்தி வந்தது. நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளுக்கு பிறகு இந்த விளையாட்டின் ஆபத்தை உலகில் அனைத்து மக்களுக்கும் எடுத்துரைத்து ஒரு வழியாக கட்டுப்படுத்தி உள்ளனர். தற்போது இந்த உலகம் ஒரு சைக்கோ உலகமாக மாறி வருகிறது. நம்மிடம் ஆண்டிராய்டு போன்கள் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரிடத்திலும் சகஜமாக பழகி வருகிறது.
நேரத்தை கழிக்க ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இதனால் உயிரைப்பறிக்க, மற்றவர்களின் தனிநபர் விஷயங்களை அறிந்து கொள்ள நிறைய ஆபத்தான விளையாட்டுக்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில் ப்ளூவேல் விளையாட்டிற்கு பிறகு தற்போது மோமோ சேலஞ் என்ற ஆபத்தான விளையாட்டு வாட்சப்பில் வெகுவாக பரவி வருகிறது. இந்த விளையாட்டு பெரும்பாலும் உலகில் அதிகமாக வாட்சப் உபயோகிக்கும் சிறு வயது குழந்தைகளை இலக்காக வைத்துள்ளது.
அர்ஜென்டினாவில் 12வயது குழந்தை இறந்த சம்பவம்
தற்போது இந்த ஆபத்தான விளையாட்டில் சிக்கி 12 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அர்ஜென்டினாவில் 12 வயது குழந்தை, தன்னுடைய வீட்டிற்கு பின்புறம் உள்ள மரத்தில் தூக்கு மாட்டி இறக்க முயன்றுள்ளது. இதனை கண்ட அந்த குழந்தையின் அண்ணன், பதறிப்போய் குழந்தையை காப்பாற்ற முயன்றுள்ளான். ஆனால் அவனால் காப்பாற்ற முடியவில்லை. உடனே தன்னுடைய அப்பா, அம்மாவை அழைத்து வந்து அந்த குழந்தையை இறக்க முயன்றுள்ளனர்.
ஆனால் குழந்தையை மரத்தில் இருந்து இறக்குவதற்குள் அந்த 12 வயது குழந்தை இறந்துவிடுகிறது. பதறிப்போன அவர்களது பெற்றோர்கள், என்ன செய்வதென்று அறியாமல் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சுற்றி பார்க்கும் போது அந்த குழந்தையின் செல்போன் ஒன்று குழந்தை, தூக்கு மாட்டுவதை படம் பிடித்து கொண்டுள்ளது. இதன் பிறகு குழந்தையின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அர்ஜென்டினாவில் எஸ்கொபார் என்ற இடத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மோமோ சேலஞ் பின்னணி கதை
உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து குழந்தையின் செல்போனை வாங்கி, குழந்தை யார் யாரிடம் இறுதியாக பேசியுள்ளது என்று பார்க்கின்றனர். அப்போது தான் இந்த மோமோ சேலஞ் என்ற விளையாட்டு குழந்தையின் உயிர் பறிபோக காரணமாக இருந்துள்ளது என்பதை கண்டுபிடிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு இந்த குழந்தையின் வாட்ஸப்பிற்கு புதிய ஜப்பான் நம்பரில் இருந்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. என்னுடைய எண்ணை உன்னுடைய காண்டாக்ட்டில் 'மோமோ' என்ற பெயரில் நாம் நண்பர்களாக இருக்க சேவ் பண்ண சொல்லி அந்த மெசேஜ் வந்துள்ளது.
அந்த 12 வயது குழந்தையும் தன்னுடன் நண்பராக இருக்க தான் கேட்கின்றனர் என்று காண்டாக்ட் லிஸ்டில் சேவ் செய்துள்ளது. நாளடைவில், சக நண்பருடன் பேசுவது போன்று பழகி அந்த குழந்தையிடம் அனைத்து தனிநபர் தகவல்களையும் வாங்கியுள்ளது. பின்பு, இந்த குழந்தையிடம் பிரைவசி என்ற அனைத்து அந்தரங்க தகவல்களையும் மோமோ என்ற கதாபாத்திரம் பறித்துள்ளது. இந்த மோமோவின் வாட்சப் DB-யில் ஒரு பெண்ணின் மோசமான உருவம் கொண்ட அமைப்பு இருந்துள்ளது.
இந்த குழந்தையின் அனைத்து தகவல்களையும் பறித்த பிறகு ஒவ்வொரு செயலை செய்யுமாறு கட்டாயப்படுத்தியுள்ளது. அப்படி செய்யாவிட்டால் உன்னை இரவில் பயமுறுத்துவேன், பெற்றோர்களை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளது. தன்னுடைய குடும்பத்திற்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அந்த 12 வயது குழந்தையும் சொல்வதையெல்லாம் செய்துள்ளது.
இறுதியாக வந்த மெசேஜில் நீ தூக்கு மாட்டி இறந்து போ என்று பல இறந்த குழந்தையின் புகைப்படங்களை காட்டி, இவர்கள் சொர்க்கத்திற்கு செல்வதாக 'BrainWash' செய்து அந்த குழந்தை தூக்கு மாட்டுவதற்கு தூண்டியுள்ளது. இதை நான் நம்புவதற்கு தூக்கு மாட்டுவதை கேமிராவில் படம் பிடி என்றும் தெரிவித்துள்ளது. இதனால் இந்த குழந்தையும் தற்போது இறந்துள்ளது. இது போன்ற சம்பவம் அர்ஜென்டினாவில் மட்டுமல்லாமல் அமெரிக்க, ஐரோப்பா மற்றும் மெக்சிகோ போன்ற இடங்களிலும் இதே மோமோ என்ற கதாபாத்திரத்தால் நேர்ந்துள்ளது.
இந்த மோமோ சேலஞ் பெரும்பாலும் குழந்தைகள் அதிகமாக உள்ள இடங்களை குறி வைத்துள்ளது. இந்த சம்பவங்களுக்கு பிறகு அமெரிக்க, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளின் காவல் அதிகாரிகள் தங்களுடைய குழந்தைகள் ஸ்மார்ட்போனில் என்ன செய்கிறார் என்று தயவு செய்து கவனியுங்கள், எச்சரிக்கையாக இருங்கள் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
மோமோ சேலஞ் மூலம் நடைபெற்ற ஹேக்கிங்
இது போன்ற சம்பவங்கள் தங்களுடைய குழந்தைகளுக்கும் நேராமல் இருக்க பெற்றோர்கள் தங்களுடைய குழந்தை, ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்துவதை ஒரு திறமையாக பாராமல் அதிலுள்ள ஆபத்தை உணர்ந்து எச்சரிக்கையாக இருங்கள். இதில் ஆச்சர்யம் என்ன வென்றால், இறந்த 12 வயது குழந்தையின் வாட்ஸப்பிற்கு வந்த புகைப்படங்களை பார்த்து அந்த 12 வயது குழந்தை அதிர்ச்சியாக பார்த்து வாயை மூடியுள்ளது. பிறகு அந்த மோமோ, வாயை மூட வேண்டாம் என மெசேஜ் அனுப்பியுள்ளது. அப்போது தான் தெரிந்துள்ளது.
இந்த மோமோ வாட்சப், அந்த குழந்தையின் கேமிராவையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. இந்த கேமிரா மூலம் அந்த குழந்தை செய்யும் ஒவ்வோர் விஷயத்தையும் கவனித்து வந்துள்ளது. இது தவிர இந்த மோமோ, அனுப்பிய புகைப்படங்களுடன் மால்வேர் எனப்படும் வைரஸை செல்போனுக்கு அனுப்பி குழந்தையின் செல்போனை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் செல்போன் உபயோகத்தில் இல்லாமல் இருந்தாலும் கேமிராவை கொண்டு அந்த குழந்தை என்னவெல்லாம் செய்கின்றது என்பதை கூர்ந்து கவனித்துள்ளனர்.
இதனால் மோமோ சேலஞ் என்ற ஆபத்தான விளையாட்டு, விளையாட்டாக மட்டுமல்லாமல் ஹேக்கிங் மூலாதாரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற ஹேக்கிங் நம்முடைய நடைமுறையிலுமே நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு செயலியை (Application) டவுன்லோட் செய்யும் போது செயலியுடன் சேர்ந்து வைரஸும் டவுன்லோட் செய்யப்படுகிறது. இது போன்ற ஹேக்கிங் செயல்கள் உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டு வருகின்றன. இதனால் அமெரிக்க, ஐரோப்பா நாடுகளில் பெற்றோர்கள் மிகவும் பயந்துள்ளனர்.
மோமோ சேலஞ் வாட்சப் எண்கள்
இந்த மோமோ சேலஞ், வாட்சப்பின் தொடக்க எண்கள் 813 (ஜப்பான்), 52 (கொலம்பியா), 57 (மெக்சிகோ). இந்த எண்களில் இருந்து உங்களுக்கோ அல்லது குழந்தையின் செல்போனுக்கோ மெசேஜ் வந்தால் பிளாக் செய்யவும். வாட்சப் நிறுவனமும் இது போன்ற விளையாட்டு வைரலாகி வருவதாகவும், முகம் தெரியாத நபரிடம் இருந்து வரும் மெசேஜ் புகைப்படங்களை பிளாக் செய்யமாறும் கேட்டு கொண்டுள்ளனர். இது போன்ற கொடிய செயல்கள் மனிதர்கள், பணத்தின் மீது வெறுப்பு கொண்ட சைக்கோ போன்ற மனிதர்களால் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. ஆதலால் தங்களுடைய குழந்தைக்கு செல்போன் தந்து அவர்களின் திறமையை வளர்ப்பதாக தவறாக நினைத்து அவர்கள் உயிர்கள் பறிபோக பெற்றோர்கள் காரணமாக இருந்து விடாதீர்கள்.