Advertisement

அரசியலிடமிருந்து மீட்கப்படுமா கருத்து சுதந்திரம்

       பதிவு : Feb 12, 2018 20:10 IST    
 அரசியலிடமிருந்து மீட்கப்படுமா கருது சுதந்திரம் அரசியலிடமிருந்து மீட்கப்படுமா கருது சுதந்திரம்
Advertisement

சமீப காலமாகவே மீடியாவில் இருப்பவர்கள் மீதும் எழுத்தாளர்கள் மீதும் பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளும், உள்ளபடி உண்மையை சொல்வதில்லை என்றும் பல தவறான கருத்துகள் மக்களின் மனதில் ஆழமாக பதிக்கப்பட்டுவிட்டது. சில சமயம் அதுவும் உண்மையாகத்தான் போய்விடுகிறது. அரசியல் காரணங்களால் சில சமயம், போலீஸின் மிரட்டலுக்கு பயந்து சில சமயம், உயிருக்கு பயந்து சில சமயம். இந்த சில சமயங்களை மீறி உண்மையை எழுதுபவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதை மக்கள் அறிவதாய் இல்லை. 

இன்றைய உலகத்தின் போக்கில் ஊடகங்களுக்கு பஞ்சமில்லை உண்மை பேசும் ஊடகங்களுக்குதான் பஞ்சம். ஓர் அரசியல் கட்சிக்கு ஒரு செய்தி ஊடகம் அவர்கள் சொல்ல நினைக்கும் கருத்துகளை மட்டுமே மக்களுக்கு உண்மையான செய்தி, உடனுக்குடன் செய்தி என்று பகிரப்படுகிறது. நடுநிலை தவறிய ஒருசில ஊடகங்களிடம் உயிருக்கும் மானத்திற்கும் பயந்து தூண்டில் புழுக்களை போல் எத்தனையோ எழுத்தாளர்கள் பொய்க்கு இரையாக்கப்பட்டனர். இப்போதைய காலகட்டத்தில் பத்திரிக்கை சுதந்திரமும் மக்களின் கருத்து சுதந்திரமும் அரசியலின் நிரந்தர எதிரியாக மாறிப்போவதை எனோ வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. 

கடந்த பத்து ஆண்டுகள் எத்தனையோ எழுத்தாளர்களை பலி வாங்கிக்கொண்டது. அதில் பல அரசியல் பின்னணி கொண்டவை என்பதும் இந்த நாள் வரை அவர்களது மரணம் தொடர்பான வழக்குகள் தீர்க்கப்படவே இல்லை என்பதும் நாடு முழுவதும் உள்ள ஊடகத்தவர்களின் ஓயாத குமுறல்கள். இந்த குமுறலில் பத்திரிகையாளர்களோடு சேர்த்து எழுத்தாளர்களும் அடங்குவர். உண்மையையும், சமூக சீர்கேடுகளையும மக்களிடம் பகிர்ந்ததற்காக அவர்களுக்கு கிடைத்தது என்னவோ துப்பாக்கி குண்டுகளே என்றறியும் போது வேதனைகள் மட்டுமே மீதம் இருக்கிறது.

 

சாய் ரெட்டி, ஜகேந்திர சிங், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கவுரி லங்கேஷ் போன்ற பலர் அடையாளம் தெரியாத சில நபர்களால் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் இருக்கும் குழப்பங்களையும் அதை சுற்றி அவர்களுக்கு தெரியாமல் நடந்த அரசியலையும் பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களிலும் எழுதியவர்கள். இறுதியாக அவர்களது எழுத்துகளே அவர்களை கொன்றது என்று எடுத்துக்கொள்ளலாம். 

கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர்:

இம்மூவரும் வெவ்வேறு நாட்களில் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களின் கொலைகளுக்கு பின்னணியில் அரசியல் உள்ளது என்பது பரவலான கருது. மிக முக்கியமாக கல்புர்கி அவரது பல பதிவுகள் ஹிந்துத்துவ சித்தாந்தங்களுக்கும், சில மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக அமைந்திருந்தது. அதுமட்டும் அல்லாமல் மறைந்த எழுத்தாளர் அனந்தமூர்த்தியின் சில ஹிந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராக கருத்துகளை ஆதரித்ததாக சொல்லப்படுகிறது. பல ஹிந்துத்துவ அமைப்புகளால் கல்புர்கி பலமுறை தாக்கப்பட்டிருக்கிறார் என்பதும் அவரது கொலைக்கும் அது போன்ற சில அமைப்புகள்தான் காரணமாக இருக்கவேண்டும் என்று உறுதியாகவே நம்பப்படுகின்றது. இந்நாள் வரை இம்மூவரின் மரணம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

கவுரி லங்கேஷ்:

கவுரி லங்கேஷ், ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர், மேடை பேச்சாளர் என பன்முகத்தோற்றம் கொண்டவர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த, லங்கேஷ், அவரது வீட்டு எதிரேயே அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கவுரி லங்கேஷ் பெங்களூரில் இயங்கி வரும் ஒரு பத்திரிக்கைக்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர். சமூக அநீதிகளுக்கு எதிராக பல முறை பெண்ணாக இருந்தும் உறுதியோடு குரல் கொடுத்தவர். இவரது மரணமும் இன்றும் கிடப்பில்தான் இருக்கிறது.

ஜகேந்திர சிங்:

 

2015-ல் ஜகேந்திர அவரது வீட்டிலே தீக்குளித்தார் என்றும் அது ஒரு தற்கொலை என்றும் காவல்துறை வழக்கை முடித்தது. உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு அரசியல் பிரமுகரின் சட்டத்திற்கு புறம்பான செயல்களை அவரது முகப்புத்தகத்தில் பதிவிட்டார் என்பதும் அதனால் பெரிய சர்ச்சை உருவானது என்பதும் பின் அவரை கைது செய்ய வந்த போலீசாரால் அவரது வீட்டிலேயே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டார் என்பதும் பலர் நம்பப்படும் செய்தி. இவரது மரணமும் விளக்கப்படவே இல்லை.  

பெருமாள் முருகன்:

அவர் எழுதி வெளியான 'மாதொருபாகன்' என்ற நாவல் சாஹித்ய அகாடமி விருது பெற்றது. வாசகர்கள் மத்தியில் பெரும்பான்மையாக வரவேற்கப்பட்டது. அதே சமயம் ஹிந்துத்துவதை இழிவு படுத்தியதாகக் கூறி அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. பல இன்னல்களுக்கு பிறகு அவர் எழுதுவதையே நிறுத்தவேண்டியதாயிற்று. 

 

அடுக்கிக்கொண்டே போகலாம் இதுபோன்ற பல பிரச்சனைகளை.  

இந்தியாவில் 1992 முதல் 2016 வரை பத்திரிகையாளர்களோடு சேர்த்து 70 எழுத்தாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் இவர்களுள் சிலர் கொல்லப்பட்டது சீருடைக்காரர்களால். விலை போன பல ஊடகங்கள் செய்யும் ஊழலுக்கு பரிசாய் அவப்பெயர் மட்டும் எழுத்தாளர்களுக்கு உரியதாய் போகிறது.

ஊழலுக்கு எதிரான, மூட நம்பிக்கைக்கு எதிரான, பெண் அடிமைத்தனத்திற்கு எதிரான, சமத்துவத்திற்கு ஆதரவான பேணா முனைகள் உடைக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. பத்திரிக்கை சுதந்திரமும், மக்களின் கருத்து சுதந்திரமும் இன்னமும் பறிக்கப்பட்டுகொண்டுதான் இருக்கின்றன. துப்பாக்கி குண்டுகளால் துளைக்கமுடியாதவை ஒருவரது எண்ணங்கள். அதனால்தான் அதன் ஊற்றுகள் அளிக்கப்படுகின்றன ஒரு மறைக்கப்பட்ட உண்மை. 

 


அரசியலிடமிருந்து மீட்கப்படுமா கருத்து சுதந்திரம்


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்

Advertisement