ads
நாளை ஐபில் போட்டியை பார்க்கவரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடு
ராசு (Author) Published Date : Apr 09, 2018 18:09 ISTஇந்தியா
ஐபில் போட்டிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிக்கொண்டிருக்கும் வேளையில் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதைப் பற்றிக் கேட்ட போது, "ஐபில் போட்டிகளை கிரிக்கெட் வாரியம் நடத்தாமல் இருந்தால் நல்லது. அவ்வாறு நடந்தால் அதற்கு பாதுகாப்பு அளிக்கப்படும்" என்று பதிலளித்தார்.
காவிரி விவகாரம் தலை தூக்கியுள்ள இந்த நேரத்தில் ஐபில் போட்டிகளை நடத்துவது இளைஞர்களை திசை திருப்பும் செயலாகும் என்று இசையமைப்பிப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகர் விவேக், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முன்பே தங்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
இதன் அடுத்த கட்டமாக, இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் சாலைகளில் தர்ணா போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் காவேரிக்கு ஆதரவான மற்றும் ஐபில் போட்டிகளுக்கு எதிரான முழக்கங்களும் எழுப்பப்படுகின்றன. முன்னதாக இவர்கள் அனைவரும் சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைய போராட்டங்கள் நடக்கும் சமயத்தில் ஐபில் போட்டிகள் நடத்தப்படக் கூடாது என்று கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர். இந்த சந்திப்பில் நடிகர் சத்யராஜ், வி. சேகர், தங்கர்பச்சன், ராம் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
இந்நிலையில், நாளை நடைபெறும் ஐபில் போட்டிக்கு கருப்பு சட்டை, கொடி, பேனர், கேமரா, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை எடுத்துவர தடை விதித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். மேலும் இந்திய கொடியை அவமதிக்கும் விதமாக செயல்படக் கூடாது என்றும் தன் சமீபத்திய செய்தி ஒன்றில், பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு சங்கம் பொறுப்பு ஏற்காது என்றும் அறிவித்துள்ளது.
இரண்டு வருட தடைக்குப் பிறகு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக நாளை சொந்த மண்ணில் களமிறங்க ஆயத்தமாகியுள்ளது. முதல் ஆட்டத்தின் த்ரில் வெற்றியுடன் நாளை நடைபெறும் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்க இருக்கிறது.
பரபரப்பான இந்த சூழ்நிலைகளில் நாளைய ஐபில் போட்டி அமைதியாக நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் தாய்நாட்டின் உரிமைக்காக குரல் எழுப்பி ஐபில் போட்டிகளை புறக்கணிப்பார்களா என்றும் மக்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது.