ads

காமன்வெல்த் பதக்கப்பட்டியலில் இந்தியா முன்னேற்றம்

துப்பாக்கி சுடுதலில் மீண்டும் தங்கம் வென்றார் ஜீது ராய் ImageCredit:Twitter @virendersehwag

துப்பாக்கி சுடுதலில் மீண்டும் தங்கம் வென்றார் ஜீது ராய் ImageCredit:Twitter @virendersehwag

21ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல்  நாளிலேயே பளுதூக்குதலில் இரண்டு தங்கங்களுடன் தன் கணக்கை துவங்கியது இந்தியா. முன்னதாக தமிழக வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் பளுதூக்குதலில் 77 கிலோ எடைப் பிரிவில்  தங்கம் வென்று தமிழ் நாட்டிற்கு பெருமை தேடித்தந்தார். இதற்காக சிவலிங்கத்திற்கு பரிசுத் தொகையாக தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் வழங்க உள்ளது.

துப்பாக்கி சுடுதலில் மீண்டும் தங்கம் வென்றார் ஜீது ராய்...பளுதூக்குதலில் பரதீப் சிங் வெள்ளி 

ஐந்தாம் நாளான இன்றும் இந்தியாவிற்கு சாதகமான ஆரம்பம் என்றே சொல்ல வேண்டும். காலையில் நடைபெற்ற பளுதூக்குதல் போட்டியில் 105 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி வென்றார் பரதீப் சிங். இதனைத் தொடர்ந்து லக்னோவைச்சேர்ந்த ஜீது ராய் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார். இதே ஆட்டத்தில்  மற்றொரு துப்பாக்கி சுடுதல் வீரரான  ஓம் மிதரவால்  வெண்கலம் வென்றார். முன்னதாக, 2014 காமன்வெல்த்தில் 50 மீட்டர்  துப்பாக்கி சுடுதலில் ஜீது ராய் 194.1 புள்ளிகளுடன் சாதனை படைத்தது  தங்கம் வென்றுள்ளார். மேலும் இவர் 2015ல் அர்ஜுனா விருதும் 2016ல் கேல் ரத்னா விருதும் பெற்றுள்ளார். இன்றைய ஆட்டத்திலும் 235.1 புள்ளிகளுடன் சாதனை படைத்தார் ஜீது ராய்.

மெஹலி கோஷ் வெள்ளி... அபூர்வி சண்டேலா வெண்கலம்

அடுத்ததாக, 10 மீட்டர் பெண்கள் துப்பாக்கி சுடுதலில் மெஹலி கோஷ் வெள்ளியும் அபூர்வி சண்டேலா வெண்கலமும் வென்றனர். முன்னதாக, 2014ல் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் துப்பாக்கி சுடுதலில்  அபூர்வி சண்டேலா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா 3ஆவது இடம்

இதுவரை இந்தியா மொத்தம் 17 பதக்கங்களை வென்றுள்ளது. இதன் மூலம், பதக்கப்பட்டுயலில் நான்காவது இடத்தில் இருந்த இந்தியா, கனடாவை பின்னுக்கு தள்ளி 8 தங்கங்களுடன் மூன்றாவது இடத்ததிற்கு முன்னேறியுள்ளது. முதல் இரண்டு இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் உள்ளனர். 

 

காமன்வெல்த் பதக்கப்பட்டியலில் இந்தியா முன்னேற்றம்