ads

தமிழ் திரைப்படத்துறையில் தற்போது நிலவி வரும் முக்கியமான இரண்டு பிரச்சனைகள்

கூடுதலாக வசூலிக்கப்படும் மாநில அரசின் 8% கேளிக்கை வரியும், டிஜிட்டல் நிறுவனங்களின் ஒளிபரப்பு செலவு

கூடுதலாக வசூலிக்கப்படும் மாநில அரசின் 8% கேளிக்கை வரியும், டிஜிட்டல் நிறுவனங்களின் ஒளிபரப்பு செலவு

தற்போது தமிழ்நாட்டில் நிலவும் திரைத்துறை பிரச்சனைகளில் முக்கியமான இரண்டு, 8% மாநில அரசு விதித்த பொழுதுபோக்கு வரி, மற்றொன்று டிஜிட்டல் திரையீட்டின் கட்டண உயர்வு.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் மாநில அரசின் கேளிக்கை வரி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்பு இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் மாநில அரசு 30% கேளிக்கை வரி வசூலித்தது. இதனை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கத்தினரும் திரையரங்கு உரிமையாளர்களும் நடத்திய போராட்டத்தில் தமிழக அரசு 8% ஆக பேச்சு வார்த்தைக்குபின் குறைத்தது.

இருந்தாலும் இவ்விரண்டு சங்கத்தினரும் முழுமையாக மாநில அரசின் கேளிக்கை வரியை அகற்ற இன்றளவும் கோரிக்கை வைத்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கும் திரையரங்கின் சி பாரம் லைசென்ஸ்யை (C - FORM LICENSE) முன்று வருடத்திற்கு ஒரு முறையாக மாற்றுவது, திரையங்கு பராமரிக்கும் தொகை 1 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக AC திரையரங்கிற்கும், 3 ரூபாயாக NON-AC திரையரங்கிற்கும் மாற்ற, தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 

தற்போது தமிழ் திரைத்துறை கடந்த ஒரு வருட காலமாக அதிகப்படியான சரிவுகளை சந்தித்து கொண்டே இருக்கிறது. ஜிஎஸ்டி வந்த பின்பு டிக்கெட் கட்டணம் கேளிக்கை வரியுடன் சேர்த்து உயர்த்தப்பட்டதால் திரையரங்குகளில் கூட்டம் குறைந்துள்ளது.  திரைப்படங்களை தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் முறையில் ஒளிபரப்ப க்யூப் (QUBE) மற்றும்  யூ எஃப்ஓ (UFO) என்னும் இரண்டு நிறுவனங்கள் மூலம் திரையரங்குகளில் ஒளிபரப்ப செய்கின்றனர்.  இதற்காக  அந்நிறுவனங்கள் வெளியிடும் கட்டணம் தான் தற்போதுள்ள தயாரிப்பாளர்களின் பிரச்சனைக்கு முக்கிய காரணம்.

தயாரிப்பாளர்களுக்கும் கியூப் போன்ற டிஜிட்டல் நிறுவனங்களுக்கும் இடையே படங்களை திரையிட கீழ்கண்ட கணக்கு முறைகள் நடைமுறையில் உள்ளது.

VPF என்ற திட்டத்தின் படி ஒரு தயாரிப்பாளர் தன் திரைப்படத்தை திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் ஒளிபரப்புவதற்கு வாரத்திற்கு குறைந்தது ரூபாய் 9000 (உதாரண தொகை) வரை செலுத்துவார்கள். ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் என்றால் வாரத்திற்கு 28 காட்சிகளுக்கும் சேர்த்து ரூபாய் 9000 செலுத்தி வந்தனர்.

இந்த கட்டணம் பெரிய அளவில் தயாரிக்கபடும் திரைப்படத்திற்கும், குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கும் திரைப்படத்திற்கும் ஒன்றே. ஒரு காட்சிக்கு 365 ரூபாய் என்ற முறையில் புதிய படங்களுக்கு இரண்டு நாட்களுக்கு கட்டணம் வசூலிக்க படுகிறது. இந்த முறையில் ஒரு வாரத்திற்கு செலுத்தினால் குறிப்பிட்ட தொகையை சேமிக்கலாம். 

முன்னணி நடிகர்களின் படம் குறைந்தது 400 திரையரங்குகளில் திரையிட்டால் 400 (திரை) x 9000 ரூபாய் (டிஜிட்டல் ஒளிபரப்பு கட்டணம்) = 27,00,000 லட்ச ரூபாயை தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் ஒளிபரப்பாளருக்கு செலுத்த வேண்டும். 

ஏற்கனவே திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் உயர்வாக உள்ளதால் மக்கள் முன் போல் வருவதில்லை. இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய படங்களை திரையிட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளனர். க்யூப் (QUBE) மற்றும்  யூ எஃப்ஓ (UFO) போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள் தங்களது விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தயாரிப்பாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

க்யூப் (QUBE) மற்றும்  யூ எஃப்ஓ (UFO) போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள், திரையரங்கு உரிமையாளர்களிடம் ஒப்பந்த அடிப்படையில் சர்வர் மற்றும் புரொஜெக்டர் போன்ற தொழில்நுட்ப சாதனங்களை மிகுந்த பொருட்செலவில் நிறுவுகிறார்கள், திரையில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களின் மூலம் வருமானத்தை பகிர்ந்து கொள்கின்றனர். சர்வர் மற்றும் புரொஜெக்டர்கள் போன்றவற்றை திரையரங்குகளில் நிறுவ ஒரு திரைக்கு அதிகபட்சமாக 60 லட்ச ரூபாய் வரையிலும் செலவு செய்கின்றனர்.

இதற்கான முதலீடுகளை டிஜிட்டல் நிறுவனங்கள் மேற்கொள்கிறது. ஒரு திரையரங்கிற்கு 60 லட்ச ரூபாய் வீதம் 500 திரையரங்கிற்கு 300 கோடி செலவாகிறது. இந்த தொகையினை டிஜிட்டல் நிறுவனங்கள் எளிதில் மீட்டெடுக்க முடியாது. மேலும் ஒரு திரைப்படத்திற்கு டிஜிட்டல் முறையில் ஒளிபரப்ப ஆகும் செலவானது ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு ஆகும் செலவில் இருந்து 0.3 சதவீதத்தில் இருந்து 1.7 சதவீதம் மட்டுமே.

இது தான் தயாரிப்பாளர்களின் கிளர்ச்சிக்கு காரணமா என்று டிஜிட்டல் நிறுவனங்கள் கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில் வரும் மார்ச் 16ஆம் தேதிக்குள் நடக்க இருக்கும் அடுத்தகட்ட சந்திப்பில் சுமுக முடிவு ஏற்பட்டால் மட்டுமே புதிய படங்கள் திரையிடப்படும். தற்போதுள்ள திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைகளையும், தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளையும் தமிழக அரசு விசாரித்து வெளியிடப்படும் முடிவை பொறுத்து திரைப்படங்கள் மற்றும் டிஜிட்டல் நிறுவனங்களின் நிலைமை அமையும்.

தமிழ் திரைப்படத்துறையில் தற்போது நிலவி வரும் முக்கியமான இரண்டு பிரச்சனைகள்