ads
கஞ்ச டானின் தேடலும், அலப்பறைகளும் தான் ஜூங்கா - திரைவிமர்சனம்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Jul 27, 2018 16:03 ISTபொழுதுபோக்கு
'ஆரஞ்சு மிட்டாய்' படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி ப்ரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஜூங்கா'. இரண்டாவது முறையாக விஜய் சேதுபதி நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் மடோனா சபாஸ்டின், சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, சுரேஷ் மேனன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஒரு கிராமத்தில் பேருந்து நடத்துனராக தனது குடும்பத்துடன் வாழ்ந்து வரும் ஜூங்கா, பேருந்தில் பயணம் செய்து வரும் மடோனா இருவரும் காதலிக்கின்றனர். மடோனா பின்பு சுற்றி அவருக்கு தொல்லை கொடுத்து வரும் ஒருவரை ஜூங்கா கண்டிக்கிறார். இதனால் கடுப்பான அவர் தனது ஆட்களை கூட்டிவந்து ஜூங்காவை அடித்து துவைத்து விடுகிறார். பின்பு தன்னை அடுத்தவர்களை பழிவாங்க நண்பனாக இருக்கும் யோகிபாபுவிடம் ஐடியா கேட்கிறார் ஜூங்கா.
யோகி பாபுவின் ஐடியா தருவதாக கூறி ஜூங்காவின் சம்பள பணத்தை வாங்கி செலவு செய்துவிடுகிறார். இதனால் கடுப்பாகும் ஜூங்கா, தன்னை அடுத்தவர்களை அவரே தேடி சென்று புரட்டி எடுத்துவிடுகிறார். இந்த விஷயம் ஜூங்காவின் அம்மாவுக்கு தெரிந்து விடுகிறது. உன்னுடைய தாத்தா, அப்பாவை போல நீயும் ரவுடியாக கூடாது என்பதற்காக தான் உன்னை ஊருக்கு அழைத்து வந்தேன் என்று கூறுகிறார். இதனை கேட்ட ஜூங்கா, நான் டான் பேமிலியா என்று மெய்சிலிர்த்து போகிறார்.
இதுதவிர தமக்கு ஒரு தியேட்டர் இருந்ததாகவும் கூறுகிறார். பிறகு தனது தியேட்டரை மீட்பதற்காக சென்னை வந்த அவர் சிறு சிறு கட்டப்பஞ்சாயத்து செய்ததில் டானாக மாறுகிறார். சில கட்டப்பஞ்சாயத்துக்கள் செய்து தனது தியேட்டரை மீட்க பணத்தை சேர்த்து வைக்கிறார். பின்பு தியேட்டர் உரிமையாளராக இருக்கும் சுரேஷ் மேனனை ஜூங்கா சந்தித்து, தியேட்டரை வாங்கி கொள்வதாக தெரிவிக்கிறார். ஆனால் சுரேஷ் மேனன் ஜூங்காவை அசிங்க படுத்தி வெளியே அனுப்பிவிடுகிறார்.
இதன் பிறகு சுரேஷ் மேனனை பழி வாங்க அவரது மகளான சாயிஷாவை கடத்த பாரிசுக்கு செல்கிறார். மறுபுறம் சென்னையில் மற்றொரு டானாக இருக்கும் ராதாரவி ஜூங்கா மீதுள்ள கோபத்தினால் தியேட்டரை இடிக்க சதி தீட்டுகிறார். இறுதியில் சயிஷாவை ஜூங்கா கடத்தினாரா? தியேட்டரை மீட்டாரா? என்பதே படத்தின் மீதி கதை.
இந்த படத்தில் வழக்கம் போல விஜய் சேதுபதி தனது வித்தியாசமான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார். ஒரு கஞ்ச டானாக அவருடைய தேடலும், யோகி பாபுவுடன் சேர்ந்து அவர் செய்யும் அளப்பறைகளும் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்துள்ளது. சயிஷாவும், மடோனாவும் அவர்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.
ஜூங்காவின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணனும், அவருடைய பாட்டியும் செய்யும் லூட்டிகள் தியேட்டரில் கை தட்டல்களை அள்ளுகிறது. முன்னணி கலைஞர்களான ராதாரவியும், சுரேஷ் மேனனும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்தின் இசையமைப்பாளரான சித்தார்த் விபினின் பாடல்கள் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. மொத்தத்தில் ஜூங்கா, ரசிகர்களுக்கு செம என்டர்டெய்ன்மெண்ட் படம் தான்.