ads
தமிழகம் முழுவதும் முடங்கியது ஏர்செல் சேவை மூடப்படுகிறதா ஏர்செல்
வேலுசாமி (Author) Published Date : Feb 22, 2018 14:53 ISTBusiness News
கடந்த சில தினங்களாக ஏர்செல் சேவை தமிழகம் முழுவதும் முடங்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அவசர காலத்தில் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ஏராளமான ஏர்செல் மையங்கள் மூடப்பட்டுள்ளது.
ஒரு சில ஏர்செல் மையங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. முடங்கிய இந்த ஏர்செல் சேவையால் வாடிக்கையாளர்கள் சில ஏர்செல் மையங்களில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் 4G க்கு மாறியுள்ளதால் ஏர்செல் நிறுவனத்தால் 4G உரிமையை பெற முடியவில்லை. இதனால் 2G மற்றும் 3G சேவையை மட்டுமே அளித்து வருகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டில் 120 கோடி லாபத்துடன் செயல்பட்ட ஏர்செல் நிறுவனம் தற்போது 2017-ஆம் ஆண்டில் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் சமீபத்தில் குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, இமாசலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தனது சேவையை நிறுத்த போவதாக டிராய் மூலம் ஏர்செல் நிறுவனம் தெரிவித்தது.
இதனால் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் ஏர்செல் சேவை முடங்கியதால் அனைத்து வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்திற்கு மாற முயற்சித்துள்ளனர். இது குறித்து வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவனத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால் ஏர்செல் நிறுவனம் தொழில் நுட்ப கோளாறுகளால் இப்படி நிகழ்ந்துள்ளது. விரைவில் இதனை சரி செய்துவிடுவோம் என சமாளித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் ஏர்செல் நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
இதற்கு ஏர்செல் நிறுவனம் 'நாங்கள் முழுமையாக சேவையை நிறுத்தவில்லை. நேர்ந்துள்ள பிரச்சனையை விரைவில் சரி செய்துவிடுவோம். ஏர்செல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சேவையை தொடர்ந்து வழங்கும்' என்று தெரிவித்துள்ளது.