ads
பத்மாவத் படத்தை தொடர்ந்து மணிகர்னிகா படத்திற்கும் எதிர்ப்பு
வேலுசாமி (Author) Published Date : Feb 08, 2018 15:07 ISTபொழுதுபோக்கு
நடிகை தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோரது நடிப்பில் 'பத்மாவத்' படம் காடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. சித்தூர் ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு கர்னி சேனா அமைப்பினர் வட மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து கடும் போராட்டங்களை நடத்தினர். திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீச்சு, பேருந்துகள் எரிப்பு போன்ற பல வன்முறை சம்பவங்களும் நடந்தது. இந்த படத்தில் ராணி பத்மினி கதாபத்திரத்தில் நடித்த தீபிகா படுகோனே தலைக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை விசாரித்து படத்தை திரைக்கு கொண்டு வந்தது.
இந்நிலையில் தற்போது 'பத்மாவத்' படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது போல் நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘மணிகர்னிகா’ படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஜான்சி ராணி லட்சுமிபாயின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம், விடுதலைப் போரின் போது அவருடைய பங்களிப்பையும் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக நடிகை கங்கனா ரணாவத் லட்சுமி பாய் கதாபத்திரத்திற்கு வாள் சண்டை போன்ற பயிற்சிகளை கையாண்டு நடித்துள்ளார் . மேலும் மராட்டிய தளபதி சதாசிவராவ் கதாபாத்திரத்தில் நடிகர் சோனு சூட் நடித்துள்ளார்.
இவர் முகலாய மன்னருக்கு எதிராக பானிபட் போரில் 3 முறை போரிட்டவர். இந்த படத்திற்கான திரைக்கதையை பாகுபலி படத்துக்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் இந்த படத்திற்கும் திரைக்கதை எழுதி உள்ளார். இயக்குனர் கிரிஷ் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் 'மணிகர்னிகா' படத்தில் வீரமங்கை ராணி லட்சுமிபாயின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாகவும், ஜான்சி ராணி லட்சுமிபாய்க்கும் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த இங்கிலாந்து ஏஜெண்டுக்கும் காதல் ஏற்படுவதுபோல் காட்சி வைத்து இருப்பதாகவும் சர்வ ப்ராமண மகாசபா என்ற அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. இதில் ராணி லட்சுமிபாய் வரலாற்றை தவறாக சித்தரிக்கப்பட்டு இருந்தால் 'பத்மாவத்' படத்திற்கு நேர்ந்த கதிதான் 'மணிகர்னிகா' படத்துக்கும் ஏற்படும் என்று அந்த அமைப்பின் தலைவர் சுரேஷ் மிஸ்ரா மிரட்டலை விடுத்துள்ளார். இதனால் இந்தி திரைப்பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தொடரும் எதிர்ப்புகளால் நடிகை கங்கனா ரணாவத் அதிர்ச்சியில் உள்ளார்.