ads
நடிகர் தினேஷின் 'உள்குத்து' உருவான விதம்
யசோதா (Author) Published Date : Dec 27, 2017 16:49 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் நடிகர் தினேஷ் நடிப்பில் தற்போது வெளிவரவுள்ள படம் 'உள்குத்து'. இந்த படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் படத்தின் சில காட்சிகள் படக்குழு வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் நடிகர் தினேஷ், நந்திதா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை கனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜே செல்வகுமார் தயாரித்துள்ளார்.
இந்த படம் வரும் டிசம்பர் 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் இயக்குனர் கார்த்திக் ராஜு அவர்கள் படம் உருவானவிதம் பற்றி தெரிவித்துள்ளார். அதில் "என்னுடைய வீட்டிற்கு அருகில் மீன் சந்தை இருக்கிறது. அதில் சின்ன பசங்க மீனை வெட்டி சுத்தம் செய்து வியாபாரம் செய்வார்கள். இந்த மீன் சந்தை புதன், சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கு மட்டும் வேலை இருக்கும். மற்ற நேரத்தில் அவர்கள் என்ன செய்வாங்க என்று யோசித்தேன். அப்போ ஆரம்பித்தது தான் இந்த கதை. இது பற்றி அதிகமாக தகவலை சேகரிக்க ஆரம்பித்தேன்.
மீன் வாங்க அவங்களுக்கு கையில் காசு இருக்காது. கடன் வாங்கித்தான் மீன் வாங்குவார்கள். காலையில் வாங்கிய கடனை மாலையில் திருப்பி தரவேண்டும். ஒரு வேளை மீன் விக்கலைன்னா என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். ஐஸ் பாக்சுல போட்டு மறுநாள் விற்பனை செய்வோம் என்றனர். வாங்கிய கடனை திருப்பி தராவிட்டால் அடி உதை தான் என்றார்கள். இதே போல் மீன் வெட்டும் பசங்களும் சில விஷயத்தை சொன்னார்கள். ஒரு கிலோ மீன் வெட்டினால் 20 ரூபாய் கிடைக்கும். ஒரு மணி நேரத்திற்கு 25 கிலோ வரை வெட்டுவேன்.
மற்ற நேரத்தில் வேலை இருக்காது என்றனர். இந்த சின்ன பசங்களுக்கு வேலை இல்லாத சமயத்தில் யாராவது இவர்களை தவறாக பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சிந்தித்தேன். பின்னர் இந்த சின்ன பசங்களை அடிப்படையாக கொண்டு ஒரு ரவுடி தனமான கதையை தயார் செய்தேன். ஒருவன் தன் வீட்டில் உள்ளவர்களை விட நண்பனிடம் அதிக விஷயங்களை பகிர்ந்து கொள்கிறான். 25 வருட நட்பு அது, ஒரு நண்பனுக்கு பிரச்னை என்றால் அவன் நண்பன் என்ன செய்வான் என்பதை மையப்படுத்தியும் இந்த கதையை உருவாக்கியுள்ளேன்.
இந்த 'உள்குத்து' என்ற பெயருக்கு உள்ளே ஒன்றை வைத்து வெளியே ஒன்றை செய்வது என்பது அர்த்தம். இதை சார்ந்து தான் இந்த கதையும் இருக்கும். சமீபத்தில் தயாரிப்பாளர் அசோக்குமார் கந்து வட்டி பிரச்சனையால் இறந்துவிட்டார். இது எனக்கு மிகவும் வருத்தத்தை தந்தது. இதனால் 'உள்குத்து' கதைக்கும் அசோக் குமார் தற்கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த கதை ஒரு வருடத்திற்கு முன்னரே அதாவது தினேஷின் 'திருடன் போலீஸ்' படப்பிடிப்பின் போதே நான், தினேஷ், பால கிருஷ்ணா மூவரும் இணைந்துவிட்டோம். இப்படித்தான் உருவானது இந்த 'உள்குத்து' " என்று தெரிவித்துள்ளார்.