×

ads

தமிழ் திரைத்துறை வேலைநிறுத்தம் குறித்து எழும் கேள்விகளுக்கு தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவின் விரிவான பதில்

தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தற்போது தயாரிப்பாளர் வேலைநிறுத்தம் குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தற்போது தயாரிப்பாளர் வேலைநிறுத்தம் குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

தயாரிப்பாளர் வேலைநிறுத்தம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிகழ்ந்து வருகிறது. இதனால் புது படங்களும் வெளியாகவில்லை, எந்த படப்பிடிப்பும் நடத்தவில்லை. ஆனால் ஒரு சில படங்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதும் பல கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்தது. தயாரிப்பாளர் வேலை நிறுத்தம் தொடங்கியதில் இருந்து  VPF, நடிகர்கள் சம்பளம் குறித்த பல கேள்விகள் மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தன்னுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிப்பில் கூறியதாவது, 

"தமிழ் திரைத்துறை வேலைநிறுத்தம் - 2018

ads

VPF எனும் வார்த்தை இவ்வளவு பிரபலம் ஆகும் என்று ஆரம்பத்தில் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு துறையில் இருக்கும் தொழில்நுட்ப விசயங்கள் அல்லது அதனுள் உள்ள குளறுபடிகளை அதன் பயனீட்டாளர்களுக்கு தெரியப்படுத்தித்தான் போராட வேண்டும் என்பது அவசியம் அல்ல என்றாலும், நாடி நரம்பெல்லாம் சினிமா ஊறிப்போய் உள்ள நமக்கு அது சிறிது காலம் தவிர்க்கப்படும் போது, அதைப் பற்றி தெளிவுபடுத்த பல தளங்கள் முற்பட்டதால் இந்த அளவுக்கு பிரபலம் ஆகி விட்டது. ஆனால் இந்த ஒரு வார்த்தைக்குப் பின் மறைந்திருந்த பல விசயங்கள் இன்று வெளிவந்துள்ளதும் திரைத்துறைக்கு பெரும் நன்மையே.

சினிமா உருவான காலகட்டம் முதல் பலதரப்பட்ட வடிவில் வரவு செலவு இருந்ததால் தயாரிப்பாளர், வினியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர் இடையே எந்த வரவு செலவு, யார் யாருக்கு என்ற வரைமுறை இருந்தது. இடையே காலமாற்றத்தில் உருவான தொழில்நுட்ப மாற்றங்களை, முறைப்படுத்த ஆட்கள் இல்லாமல் போக, திரையரங்க வருவாயில் சேவை நிறுவனங்களாக சில கார்ப்பரேட்டுகள் உட்புகுந்து வருடாவருடம் VPF என்றபெயரில் சுமார் 40 கோடியும், ஆன்லைன் புக்கிங் என்ற பெயரில் சுமார் 80 கோடியும் தமிழகத்தில் மட்டும் தனியே எடுத்து சென்றுவிடுகின்றனர்.

இதில் திரையரங்கை நோக்கி மக்களை வர வைக்கின்ற படத் தயாரிப்பாளருக்குஎந்த பங்கும் கிடையாது. இதை கேட்க ஆளில்லாமல் போகவே திரையரங்கங்களும் நமக்கு மேலும் தனியே வருவாய் வரட்டுமே என்று அமைதியாக இருந்துவிட்டனர். இன்று ஏதோ தயாரிப்பாளர்கள் கேட்கக்கூடாததை கேட்டுவிட்டது போல் கோபப்படுவது ஆச்சர்யம் அளிக்கிறது. இப்போது GST வேறு கூடுதலாக. இவையெல்லாம் ஒரு வகையில் மக்கள் தலையில்தான் அதிக சுமையாக விழுகிறது.

ads

இந்த சமயத்தில் ஏதோ நல்லது நடந்தால் சரி என்று சிலர் இருந்தாலும், பலருக்கு பல்வேறு குழப்பங்கள்...

1. ஒரு VPF – ற்காக இவ்வளவு இழப்புகள் தேவையா?2. திடீரென ஒரே நாளில் மாற வேண்டும் என்று கேட்பது நியாயமா?3. பட வெளியீட்டை நிறுத்துவது இருக்கட்டும், படப்பிடிப்பை ஏன் நிறுத்த வேண்டும்?4. மற்ற மாநிலங்கள் 16% விலைக்குறைப்பை பெற்றுக்கொண்டு அவர்கள் வேலையைப் பார்க்கிறார்கள். தமிழ் சினிமாவிற்கு மட்டும் என்ன பிரச்சினை?5. நடிகர் சம்பளத்தை குறைத்தால் எல்லாம் சரியாகிவிடும். அதை விட்டுவிட்டு அதைவிட சிறு விசயங்களுக்கு சண்டைபோடுவது நல்லதா?6. நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்காக மக்கள் போராடிக்கொண்டு இருக்கும் வேளையில் சினிமாகாரர்களுக்கு இது தேவையா?

இப்படி பலவகையான கருத்துக்கள் தினம் வந்தவாறு உள்ளன. இவ்வளவு கேள்விகள் இருக்கும் பொழுது அதை தெளிவுபடுத்துவது நல்லது என்பதாலேயே இந்தப் பதிவு முயற்சி!

1. VPF

மீண்டும் மீண்டும் இதைப்பற்றிய பொய்ப்பிரச்சாரம் இங்கு பரப்பப்படுகிறது. VPF என்பது Virtual Print Fee - யே தவிர Virtual Projector Fee கிடையாது என்று கூறி பலர் ஆவேசப்படுவதை பார்க்க முடிகிறது. அப்படியே ஆகட்டும் ஐயா, இனிமேல் எங்களுக்கு இந்த VPF சேவை என சொல்லப்படும் (Mastering, DCP encryption charges, KDM charges, Screening room charges for producer/ artists, Satellite Bandwidth charges, Last mile logistic charges, Subtitle chargesand all charges relating to converting print to digital cinema package - DCP, compressing, transmitting and delivering the package to the Projector) அனைத்து சேவைகளையும் சுமார் ரூ.15000 – ற்கு பதிலாக வெறும் 3000 - ₹4000 ரூபாய்க்கு தர சில நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அந்நிறுவனங்களுடன் நாங்கள் இந்த சேவை ஒப்பந்தம் செய்து கொள்கிறோம் என்றால், உடனே திரையரங்க உரிமையாளர்கள்...

• நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளோம். அது முடியும் வரை நீங்கள் அவர்கள் (DSPs) சொல்லும் விலையில் அவர்கள் மூலமே print தரவேண்டும்• நீங்கள் பணம் தராவிட்டால் தொழில் நுட்பம் வளராது• புரஜெக்டர் குறுகிய காலத்தில் காலாவதியாகிவிடும். அதனால்தான் இந்தவிலை• உங்கள் செலவுகளை குறைக்க நாங்கள் உதவி செய்ததற்கு நீங்கள் செய்யவேண்டிய கைமாறு • இதுபரவாயில்லை... இவ்வளவு காலம் கொடுத்தீர்கள். அதனால் இனிமேலும் நீங்களே தரவேண்டும் என பலவாறு நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

ads

Analog – ல் இருந்த Digital தொழில்நுட்ப மாற்றம் அவசியமான பொழுது அதற்கு தயாரிப்பாளரிடம் வசூலித்தது சரி. அதே சமயம் தொழில்நுட்ப தர உயர்த்துதலுக்கும் தயாரிப்பாளரை செலவழிக்க வைப்பது நியாயமற்றது. அடுத்த மாநிலங்களில் என்னவோ அதுவே நீங்களும் செய்யுங்கள் என கூறுவது திசைதிருப்பும் முயற்சி என்பது இங்கு அனைவருக்கும் தெரியும். ஒரே யுக்தியை எவ்வளவு காலம்தான் பயன்படுத்துவது?

ஒரு திரையரங்கம் அதன் நிர்வாகத் தேவைகளை கருத்தில் கொண்டே டிக்கெட் வருவாயில் தயாரிப்பாளருடன் பங்கிடும் சுமார் 50% - 60 % உடன் உபரியாக...

• திரையரங்க பராமரிப்பு கட்டணமாக நபருக்கு ரூ.1• வாகன நிறுத்த கட்டணம்• கேன்டீன் வருவாய்• விளம்பர வருவாய்

ads

என மேற்கண்ட வருவாய் காலம் காலமாக கிடைத்து வருகிறது. இதை வைத்தே திரையரங்குகள் இருக்கைகள், வரி, பராமரிப்பு, புரஜெக்டர் என எல்லா செலவுகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்த வருவாயை வைத்தும் வருமானம் போதவில்லை என்றால் இந்த தொழில் சார்ந்த வரியை குறைப்பது அல்லது மானியம் பெறுவது பற்றி அரசிடம் பேச யோசிக்க வேண்டுமே தவிர, தயாரிப்பாளர் மேல் சுமையை கடத்தக்கூடாது என்பதே என் வாதம்.

2. திடீரென ஒரே நாளில் மாற வேண்டும் என்று கேட்பது நியாயமா?

இந்த கோரிக்கைகள் காலம் காலமாக கேட்கப்பட்டு வந்தவைதான். VPF சம்பந்தமாக இரண்டரை வருடங்களுக்கு முன் திரு. தாணு அவர்கள் தலைமையில் தயாரிப்பாளர்கள் உண்ணாவிரத போராட்டம் இருந்தது சிலருக்கு நியாபகம் இருக்க வாய்ப்பு உள்ளது. அன்று, ஒரு தனியார் நிறுவனத்திற்கு எதிராக திரைத்துறை போராடுகிறதே என சிரித்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் ஒரு தனியார் நிறுவனம் இவ்வளவு வலுப்பெறும் வரை அனைவரும் அஜாக்கிரதையாக விட்டதே இன்று இவ்வளவு தூரம் கொண்டு வந்துவிட்டது.

மெர்சல் வெளியீடு சமயத்தில் அனைவரும் ஒன்றாக போராடுகையில், தயாரிப்பாளர்களின் இன்றைய கோரிக்கைகளில், VPF தவிர மற்ற அனைத்திற்கும் உடன்படுவதாக, திரையரங்க முக்கியஸ்தர்கள் தயாரிப்பாளர்களுக்கு வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், கட்டண ஏற்றத்திற்கு அரசு ஒப்புக்கொண்டவுடன் அப்படியே தயாரிப்பாளர்களை விட்டுவிட்டு பட வெளியீட்டைப் பார்க்க சென்றுவிட்டனர் திரையரங்க முக்கியஸ்தர்கள்.

இனியும் வெறும் வாய் வார்த்தையை நம்ப தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. தயாரிப்பாளர்கள் நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கையில் அவை உதாசீனப்படுத்தப்படும் போது வேறு என்ன செய்வது? ஏறக்குறைய 95% நட்டம் உள்ள போது போராடாமல், வேறு எப்போது போராடுவது? இவை அனைத்தும் செயல்படுத்த 2 மாதங்கள் போதும். ஆக, தயாரிப்பாளர்கள் உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கேட்பதில் தவறு எதுவும் இல்லையென்பதே என் கருத்து.

3. பட வெளியீட்டை நிறுத்துவது இருக்கட்டும், படப்பிடிப்பை நிறுத்த வேண்டுமா?

படங்கள் வெளியீடு நிறுத்தப்பட்டு உள்ள போது, ஏற்கனவே ரிலீஸுக்கு தயாராக உள்ள படங்களோடு, மேலும் படங்கள் சேர்ந்தால் அவை அதிக பாதிப்புகளையே தருமே தவிர எந்த நன்மையும் தரப்போவதில்லை. அனைத்து தயாரிப்பாளர்களும் நட்டத்தையே சந்திக்கும் பொழுது இவற்றை சீரமைக்காமல் எவ்வளவு காலம் தள்ளிக்கொண்டே போவது? தமது சுயநலத்திற்காக மற்றவர்களை தட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் சிலரைத் தவிர தயாரிப்பாளர் நன்றாக இருக்க வேண்டும் என்ற என்னமுள்ள அனைத்து தொழிலாளர்களும் தங்கள் கஷ்டங்களை பொறுத்துக்கொண்டு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாகவே உள்ளனர். இதை தயாரிப்பாளர் சங்கம் என்றும் மறவாது என நம்புகிறேன். கடந்த காலங்களில் இல்லாத அளவு இன்று தயாரிப்பாளர் - தொழிலாளர்களிடையே நல்ல புரிதல் உள்ளது. இந்த போராட்டம்தான் திரைத்துறை சந்திக்கும் கடைசி போராட்டமாக இருக்க வேண்டும். அதற்கு இந்த புரிதல் உதவும் என நம்புகிறேன்.

4. மற்ற மாநிலங்கள் 16% பெற்றுக்கொண்டு அவர்கள் வேலையைப் பார்க்கிறார்கள். தமிழ் சினிமாவிற்கு மட்டும் என்ன பிரச்சினை?

தமிழ் சினிமா, மற்ற மாநிலங்களுக்கு ஒரு காலகட்டம் வரை சினிமா தலைநகரமாக விளங்கினாலும், இன்று என்னவோ மோசமான நிலையில்தான் உள்ளது. இதை சரி செய்ய இதை விடுத்து வேறு தருணம் கிடையாது. அதுமட்டுமல்ல அந்தந்த மாநிலங்கள் இந்த விசயத்தில் அவர்களுக்கென்று ஒரு திட்டத்தோடு அணுகுகிறார்கள். தமிழ் தயாரிப்பாளர்கள் இன்றே தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். வெகு விரைவில் அங்கும் பெரிதாக இவை வெடிக்கும்.

5. நடிகர் சம்பளத்தை குறைத்தால் எல்லாம் சரியாகிவிடும். அதை விட்டுவிட்டு சிறு விசயங்களுக்கு சண்டைபோடுவது நல்லதா?

நடிகர்கள் சம்பளம் சீராக வேண்டும் எனில், கட்டண விற்பனையில் வெளிப்படைத்தன்மை கட்டாயமாக்கப்பட வேண்டும். குத்துமதிப்பான வசூல் செய்திகளை வைத்துக்கொண்டே அனைத்து படங்களும் திட்டமிடப்படுகிறது. இதனால் சம்பளங்களும் அவ்வாறே கேட்கப்படுகிறது. இங்கு மனிதர்களை யாரும் நம்பத் தயாராக இல்லை. மனிதர்களும் அதற்கு இடம் கொடுப்பது இல்லை. ஆகவே, கட்டண விற்பனை முழுக்க கணினி மயமாக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை கட்டாயமாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இது மட்டுமல்லாமல் வெளிப்படைத்தன்மையால் சம்பள பகிர்வு முறை, கசிவில்லாத வருவாய், வங்கி கடன் வாய்ப்புகள், முறையான கட்டணம் மற்றும் அனைத்து துறையினரிடையே நல்ல புரிதல் என பல்வேறு பயன்கள் உள்ளன. அதனால்தான் தயாரிப்பாளர் சங்கம், முதல் நாள் தொட்டே இவற்றை வலியுறுத்தி வருகிறது.

6. நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்காக மக்கள் போராடிக்கொண்டு இருக்கும் வேளையில் சினிமாகாரர்களுக்கு இது தேவையா?

சினிமா என்பது ஒரு தொழில், ஆனால் அரசியல் என்பது சேவை. ஒரு தொழில் நன்றாக இல்லையென்றால் அது சார்ந்த விசயத்திற்காக போராட அனைவருக்கும் உரிமை உள்ளது. அரசியலும் சினிமாவும் மிக நெருக்கமானதாக உள்ளதால் சினிமாகாரர்கள் அரசியல்வாதிகளின் கடமையோடு ஒப்பிடப்பட்டு ஏளனத்திற்கு உள்ளாகின்றனர். இது மாற வேண்டும். ஆனால் இப்போதுள்ள அரசியல் சூழலில் இதற்கு சிறிதுகாலம் வாய்ப்பில்லை என்பதே உண்மை.

ஒரு வாதம் முன்வைக்கப்படும்பொழுது அதற்கான தீர்வை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இல்லையெனில் அது வெறும் விளம்பரமாக அறியப்படும். இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பொழுது இது ஏதோ ஒரு தனியார் நிறுவனத்திற்கு எதிராக மட்டுமே இருந்து. இன்று அது திரையரங்கங்களுக்கு எதிரான போராட்டமாக தோன்றுவதற்கு காரணம், தயாரிப்பாளர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு திரையரங்கங்களிடமே இருக்கிறது என்பதால்தான்.

இது இன்று ஒரு பங்காளிச் சண்டையாக இருந்தாலும், நமக்குள்ளே பேசி தீர்த்துக்கொண்டால் இருவருக்கும் நலமானதாக அமையும். இல்லையெனில் இருவருக்கும் அது சாதகமாக அமையப்போவதில்லை. தயாரிப்பாளர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறாமல் இந்த போராட்டம் முடிவடைந்தால், அனைவரின் கஷ்டங்களும் வீணாகிவிடும் என்பதாலேயே தயாரிப்பாளர்களும், அவர்களுடன் தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் உறுதியாக உள்ளனர்.

ஆகவே, தயாரிப்பாளர் சங்கம் இனிமேலும் காத்திராமல் தங்களது மாற்றுத் திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டி உள்ளது.

- S.R.பிரபு"

தமிழ் திரைத்துறை வேலைநிறுத்தம் குறித்து எழும் கேள்விகளுக்கு தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவின் விரிவான பதில்

ads